கற்பனைகளும் கனவுநிலை மானுடர்களும் இல்லாத யதார்த்தமான வாழ்க்கைப் பதிவுகள், சமூக அக்கறை மிகுந்த இலக்கியப் படைப்பாளிகளின் மனம் சேரும் போது உயிரோட்டம் கொண்ட எழுத்துகளாக உருவாகின்றன. நிஜங்களை உறைய வைத்துக் காட்சியாக்கும் நிழற்படம் போல இவை காலத்தின் பதிவுகளாகவும் நிலைகொள்கின்றன. இவ்வாறான படைப்புகள் சமூக விழிப்புணர்வின் ஆதார சக்தியாகவும் உள்ளன என்பது நயத்தலுக்குரியது.
சியாமளா யோகேஸ்வரனின் சிறுகதைத் தொகுப்பான 'நம்பிக்கை' யும் இத்தகைய எதிர்பார்ப்பினைக் கொண்டதாகவே அமைந்திருப்பது சிறப்பு. சமநிலை கொண்ட சரளமான எழுத்துநடை , பல்சுவை, பன்முக விடய அறிவு, பாரபட்சமற்ற வெளிப்படைத் தன்மை , கதையூடு இயல்பாகவே தொட்டுச் செல்லும் நகைச்சுவை என்பன இவரது படைப்புகளுக்கு அணி செய்கின்றன. தாயகம், புலம்பெயர் தேசம், பழமை புதுமை என்ற மாறுபட்ட நிலைக் களங்களிலும் இவர் கருப்பொருளினை உருவாக்கி உள்ளார்.
முழுமையாக வாசிக்க
ஜீவநதி பதிப்பக வெளியீடான 'நம்பிக்கை' எனும் இத்தொகுப்பு பதின்மூன்று சிறுகதைகளை உள்ளடக்கியது.
பேராதனைப் பல்கலைக்கழக விவசாய பீடப்பட்டதாரியான சியாமளா தற்போது அவுஸ்திரேலியா லக்ராலிஸ் பன்னாட்டு பால் தயாரிப்பு நிறுவனத்தில் தர நிர்ணயக்கட்டுப்பாட்டு ஒருங்கிணைப்பாளராகப் பணி புரிந்து வருகிறார்.
இவரது வெளியீடுகளாக 3 நாவல்கள் , 3 சிறுகதைத் தொகுப்புகள் , இந்து மதத்தை அறிவியலுடன் இணைத்து இன்றைய சந்ததியினருக்குப் புரியும் வகையில் ஆங்கிலத்திலும் தமிழிலும் 'இணையில்லா இந்து மதம்' ஆகிய நூல்கள் வெளியாகி இருப்பதுடன் சமகால நிகழ்வுகள் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதி வருகின்றார். அண்மைய வருடங்களில் இதயராகம் , கானல் நீர் என்ற நாவல்கள் இலங்கை அரச இலக்கிய விருதுக்காகப் பரிந்துரை செய்யப்பட்டிருந்தன.
'நம்பிக்கை' சிறுகதைத் தொகுப்பில் உள்ள கதைகளும் அவற்றின் உணர்வுகளும் உரையாடல்களும் வீட்டின் சுவர்களுக்கிடையே நடப்பதான உணர்வினைத் தந்தாலும், அவற்றிற்கான தோற்றுவாய் இன்றைய சமூக நடப்புகளின் உக்கிரமான பிரச்சனைகளை இனம் காட்டுவனவாக அமைந்துள்ளதால் ஆழமான உணர்வுத் தாக்கத்தினையும் உயரிய வாசிப்பு அனுபவத்தையும் தருகின்றன.
போதைவஸ்து பாவனையும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய சமூக ஊடகங்களால் பதின்ம வயதினருக்கு ஏற்படும் பாதிப்பும் இதில் முக்கியமானவை. இவர்களை மீட்டெடுத்து மறுபிறப்புத் தருவதில் குடும்பத்தினரின், முக்கியமாகப் தாய்மையின் அர்ப்பணிப்பான பங்கு விதந்துரைக்கப் பட்டுள்ளது.
ஆனால் பெண்கள் எப்போதுமே பொறுப்பான சிந்தனை உடையவர்கள் அல்ல என்பதையும் பெண் எழுத்தாளரான இவர் மறைக்க விரும்பவில்லை. இதன் மூலம் பக்கச்சார்பற்ற தன்மையினை நிலைநிறுத்துகிறார். பெண்களின் பக்கமிருந்து மட்டும் பிரச்சனைகளை அணுகாமல், நன் மனமும் விட்டுக் கொடுப்பும் கொண்ட ஆண்களின் உணர்வுகள் சார்பாகவும் பேசும் நியாயமான பெண்ணாகத் தன்னை வெளிப்படுத்துகிறார். புரிதல் மிகுந்த இல்லற இணையின் துணையைப் பெற்ற பெண் என்பது இவரது எழுத்துகளின் ஊடாக வெளிவரும் அழகிய உண்மை. பாராட்டுகள்.
சில பெண்கள் ஆடம்பர வாழ்வினுக்காகவும் ஏனையோரின் பார்வைகளுக்காகவும் அனாவசிய செலவுகளை மேற்கொண்டு அதனால் உருவாகும் வாழ்க்கைப் பிரச்சனைகளை 'பஞ்சவர்ணம் தேடும் பச்சைக் கிளிகள்' கதையும், சில பெண்ணிய அமைப்புகளின் பொய்முகங்களால் குடும்பவாழ்வில் ஏற்படும் குழப்ப நிலைகளையும் பெண்மனதின் உணர்வுப் போராட்டங்களையும் 'கறையான்கள்' கதையும் மிகச் சிறப்பாகக் கூறுகின்றன. பிள்ளைகளின் கல்வியில் அளவுக்கதிகமான அக்கறையினைக் காண்பித்து அவர்களின் மனச்சுதந்திரத்தையும் தன் மன நிம்மதியையும் கெடுத்துக் கொள்ளும் பெண்களையும் இனம்காட்டுகிறார். சிறப்பான காட்சிப்படிமங்கள், உரையாடல்கள் இக்கதைகளுக்கு உயிரோட்டம் தருகின்றன.
பெண்ணுக்குப் பெண்ணே முதன்மை எதிரியாகும் நிலை பலரின் வாழ்வில் நிகழ்வதுண்டு . காலம் கடந்த உணர்தலையும் ஏக்கங்களையும் இவை உருவாக்கும் . தாயகத்தை விட விவாகரத்திற்கான வாய்ப்புகள் இலகுவான புலம்பெயர்ந்த தேசங்களில், இவ்வகையான சூழ்நிலைகளுக்கு முகம் கொடுத்தல் அதிகமெனினும் இவற்றிற்கான சுமுகமான தீர்வொன்றினையும் படைப்பாளர் முன்வைத்திருப்பது நேர்வய சிந்தனைகளை மேலோங்கச் செய்கின்றது.
தசாப்தங்களுக்கு முந்திய தாயக வாழ்வினை நினைவூட்டும் சில கதைகளில் இனிமையான பழைய நினைவுகளுடன் உண்மைக் காதலும் அதன் உணர்வுப் போராட்டங்களும் வெளிப்படுத்தப் பட்டிருப்பதுடன் சாதியத்தின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட இளநெஞ்சங்களின் மனச் சஞ்சலங்களும் கூறப்பட்டுள்ளன.
அதே சமயம் பொய்முகங்கள் கொண்டு ஏமாற்றும் நயவஞ்சகர்களால் பெண்களின் வாழ்வு சீர்குலைவதையும், தாம் பெற்ற குழந்தைச் செல்வங்களின் நல்வாழ்வு கருதியும் சமூகப் பார்வைக்கு அஞ்சியும் மனப்போராட்டங்களுடன் 'திருமதியாகவே' வாழ்வினைத் தொடரும் பெண்களின் இயலாமையினையும் கூறிச் செல்கிறார்.
மரணத்தினால் சில சாபங்கள் தீரும் என்ற நம்பிக்கையில், தன் பிள்ளைகளின் ஒற்றுமைக்காக மரணத்தையும் விரும்பி ஏற்கலாம் என்று கருதும் உன்னதமான தாய்மையை வெளிப்படுத்தும் தலைப்பிற்குரிய கதை 'நம்பிக்கை' விதவைகளின் வாழ்வு இன்றும் சிலருக்கு கேள்விக் குறியாகவே தொடருவதும், தன்னலம் மிக்க பிள்ளைகளால் பெற்றோரின் வாழ்வு சிரமத்திற்குள்ளாவதும் மானுடத்தின் மீதான நம்பிக்கையின்மையையும் தோற்றுவிக்கிறது.
இதை ஒத்ததாக , குடும்பத்திற்காக தம் சுயத்தை இழக்கும் பெண்கள் நோய்நிலையால் தமதுயிரை இழக்கும் ஒரு சூழ்நிலையில் மிக இலகுவாக அதைக் கடந்து செல்லும் குடும்பத்தினருக்கு மத்தியில் நட்பின் இலக்கணமாக மற்றுமோர் பெண், தன் தோழியின் பிரிவினால் வருந்துவது நட்பின் உன்னதத்தைக் கூறுகிறது.
தாயகம் சார்ந்த களங்களிலும் மனப்பாங்கிலும் பல சிறுகதைகள் எழுதப்பட்டிருந்தாலும் புலம்பெயர் வாழ்வொன்றினை நோக்கிய பயணத்தில் எதிர்கொள்ளும் கலாசார பண்பாட்டு மாற்றங்கள் காரணமாகப் பலர் தாம் விரும்பாமலே பொய் முகமூடிகளை அணிந்த கொள்ள வேண்டிய கட்டாயத்தினையும் கதைகளில் உணர முடிகிறது.
அத்துடன் தாயகத்தில் இருந்து புலம் பெயர்ந்து சென்ற ஒரு எழுத்தாளராக வெளிநாட்டினை மோகிக்கும் மனதினைக் கொள்ளாது புலம்பெயர்ந்தோரின் சிந்தனா ஒடுக்கங்கள் சிலவற்றையும் நேர்மையுடன் வெளிக்கொண்டு வருகிறார்.
மிக ஆழமான விடயங்களை உணர்வு பூர்வமாகக் கையாளும் அதே சமயம் மனதினை இலேசாக்கும் இயல்பான நகைச்சுவை உணர்வும் சிறப்பாகக் கைவரப் பெற்றவர் படைப்பாளர்.
'பயணங்கள் முடிவதில்லை' என்ற கதை அன்பான கணவன் மனைவிக்கிடையே மதுபாவனையால் ஏற்படும் அன்றாட குடும்பப் பிரச்சனைகளை நகைச்சுவையுடன் அலசிச் செல்கிறது . யுத்தம் சூழ்ந்த ஒரு காலகட்டம் . வேறு பொழுதுபோக்குகளே இல்லாத நேரம். இரு வீட்டிற்கும் இடையில் உள்ள அந்த 'வேலிப் பொட்டுக்குள்ளால்' அடுத்த வீட்டில் நவரசங்களும் அரங்கேறுவதை ரசிக்கும் அண்டை வீட்டு இளையோர். இரவினில் ஆட்டம் என ஆரம்பமாகும் குடிகாரச் சண்டைகளை ஒரு கலைப்படத்தின் இயல்பான சுவையுடன் காட்சியாகக் காட்டுகிறார். எந்த இடத்திலும் 'தள்ளாட்டம்' காணாத இரசனைக்குரிய கதை .
இறைபக்தி மனம் சார்ந்தது. ஆடம்பரங்களும் அதிகரித்த மதச் சடங்குகளும் இறைவனுக்கு ஒவ்வாதது என்பதை மனநேர்மையுடன் நகைச்சுவையாக வெளிப்படுத்திய விதம் அபாரம். சாமிக்கு வந்த சோதனை மிக வித்தியாசமான முயற்சி. அதிலும் குறிப்பாக ஒருசில வரிகள் எழுத்தரின் குறும்புத்தனத்தை அருமையாக வெளிக்காட்டுகின்றன.
"எனக்கு வாரத்தில் இரண்டு விடயங்கள் கட்டாயமாக நடந்தாக வேண்டும். வாரத்துக்கு ஒரு தடவையாவது கணவனை வம்புக்கு இழுக்க வேண்டும். அடுத்து ஆனைமுகத்தானைச் சென்று சுகம் கேட்க வேண்டும். நான் விரிக்கும் வலையில் விழுந்து விடக் கூடாது என்று என் கணவர் ஒவ்வொரு வார்த்தையும் ஒன்றுக்குப் பத்துத் தரம் யோசித்த பின்னரே பேசுவார்"
ஆனைமுகத்தான் நிலையும் பரிதாபம்தான்.
நிறைவாக, தொகுப்பின் ஆரம்பத்தில் இன்றைய காலகட்டத்திற்கு அவசியமான விழிப்புணர்வுக் கதைகள், இடையில் மனமகிழ்வினையோ கனதி மிகும் சோகத்தினையோ தந்து செல்லும் பல்சுவைக் கதைகள், நிறைவாக நகைச்சுவை உணர்வுடன் மனதினை இலேசாக்கி அறிவுபூர்வமாகச் சிந்திக்க வைக்கும் கதை என கலவையான சங்கமத்தினை வாசகருக்கு தந்து நிற்பதால் இத்தொகுப்பினை 'ரசனைகளின் ராகமாலிகை' என நம்பிக்கையுடன் கூறிச் சிறப்பிக்கலாம்.