இனம், மதம், மொழியைக் கடந்து மக்களின் நலனை முதன்மையாகக் கொண்டது தான் அரசியல் என்ற வரைவிலக்கணத்தைச் சொல்ல நினைத்தாலும் யதார்த்தம் அதுவாயில்லை. பதவி என்று வந்து விட்டால், அபிவிருத்தி அடைந்த நாடு, மனமும் குணமும் பண்பட்ட மனிதர்களைக் கொண்ட நாடு போன்ற முகமூடிகள் கழன்று விடுகின்றன என்பது ஜீரணிக்க முடியாத உண்மையாக உள்ளது. அந்த அரசியல் களத்தில் சூழ்நிலைக் கைதியாக நிற்கும் எம்மவர்களில் ஒருவருடனான நேர்காணலில் நான் அறிந்து கொண்டவற்றை இங்கே எல்லோருடனும் பகிர்ந்து கொள்ளத் தோன்றியது. எந்தக் கட்சியையும் அல்லது தனி நபரையும் ஆதரிப்பது இந்தக்கட்டுரையின் நோக்கமல்ல.
திரு. ஜொனதன் சிறீரங்கநாதன் மனித நேயமும் சமுதாய அக்கறையும் கொண்ட ஒரு அரசியல்வாதியாக குயின்ஸ்லாந்து கபா(Gaba) பிரதேச சபையின் கவுன்சிலர் என்ற பதவியில் ஏழு ஆண்டுகள் தொடர்ந்து சேவை ஆற்றியவர். இந்த ஆண்டு பிறிஸ்பேன் நகரசபைக்கான நகரபிதா பதவிக்காகக் கிறீன்கட்சியின் சார்பில் போட்டியிட்ட அவருடனும் அவருடைய தந்தையுடனுமான பேட்டியின் போது அவுஸ்திரேலிய அரசியலைப் பற்றி அறிந்து கொண்டவற்றை எதிரொலி வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
அவர்களுடனான உரையாடலை அப்படியே பதிவு செய்தால், ஜொனதனின் உண்மையான நிலையைப் பதிவு செய்ய முடியாது என்பதால் கேள்வி பதில் என்பதாக இல்லாமல் அவர்களிடமிருந்து பெற்ற தகவல்களைக் கட்டுரை வடிவில் பதிவு செய்திருக்கின்றேன்.
ஜொனதனின் தந்தை ஸ்ரீரங்கனாதன் இலங்கையைச் சேர்ந்த தமிழர். அதனாலேயே தமிழின் மீது இயல்பான பற்றுக் கொண்ட ஜொனதன் அவர்கள் ஒவ்வொரு வருடமும் பிறிஸ்பேன் தமிழ் பாடசாலைக் கலைவிழாவில் தவறாமல் கலந்து கொண்டு அவரது எளிமையான பேச்சின் மூலம் பலரின் மனதை வென்றிருக்கின்றார். அத்துடன் சிறுவர்களினதும் இளைஞர்களினதும் ஒரு முன்மாதிரியான தலைவராகவும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றார். ஜொனதன் ஸ்ரீ என்று எல்லோராலும் இலகுவாக அழைக்கப்படுவதற்காகச் சுருக்கித் தன் பெயரைப் பதிவு செய்திருந்தவர், தமிழ்மொழியின் மீது கொண்ட பற்றுக்காரணமாகவும், மற்றவர்களுக்காகத் தந்தையின் பெயரைச் சுருக்கிக் கொள்ளக் கூடாது என்பதாலும் தன் பெயரை ஜொனதன் ஸ்ரீரங்கனாதன் என்று முழுமையாகப் பின்னர் மாற்றிக் கொண்டவர்.
முதலில் தம்மைப் பற்றிய அறிமுகத்தைத் தருகின்றார் தந்தை ஸ்ரீரங்கனாதன் அவர்கள். இலங்கையில் இருந்து குடி பெயர்ந்து இலண்டனில் பத்து வருடகாலங்கள் வாழ்ந்ததாகவும் பின்னர் காதல் மனைவியுடன் அவுஸ்ரேலியாவுக்கு குடி பெயர்ந்து 35 வருடங்கள் ஆகி விட்டதாகவும், ஜொனதன் அவர்கள் இங்கு வந்த பின்னர் பிறந்ததாகவும் குறிப்பிடுகின்றார். ஸ்ரீரங்கனாதன் அவர்கள் குடிவரவுத்திணைக்களத்திலும் திருமதி ஸ்ரீரங்கனாதன் ஆசிரியராகவும் வேலை பார்த்துப் பின் ஓய்வு பெற்றதாகச் சொல்லியிருந்தார்.
ஜொனதனுக்கு அரசியலில் எவ்வாறு ஆர்வம் பிறந்தது என்று கேட்ட போது, ஜொனதன் பன்னிரண்டாம் வகுப்பில் வெகு சிறப்புத்தேர்ச்சி பெற்றதாகவும், அரசியலில் ஆர்வம் இருந்ததால் தந்தையின் வழிகாட்டலுடன் சட்டத்துறையைத் தெரிவு செய்து கற்றதாகவும், குறிப்பிடுகின்றார். அன்னையுடன் டார்வினில் இருந்த போது, இந்நாட்டின் பூர்விகக்குடிகள் எதிர் நோக்கும் பிரச்சனைகள் பற்றி நேரில் பார்த்து அறிந்து கொண்டதுடன் அவர்களுக்கான உரிமையைப் பெற்றுக் கொடுக்க வேண்டுமாயின் அரசியலில் ஈடுபட வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டதாகவும் சொன்னார். அத்துடன் கொழும்பில் வாழும் ஜொனதனின் அத்தை இலங்கையில் தமிழர் படும் அவலங்களைப் பற்றிப் பேசிய போதெல்லாம் அரசியலில் ஈடுபடுவதன் மூலம் தன்னால் முடிந்த உதவியைத் தமிழர்களுக்குச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்ததாகவும் தந்தை குறிப்பிட்டிருந்தார்.
ஈழத்தமிழர் தொடர்பில் ஏதாவது செய்து கொண்டிருக்கின்றாரா என்ற கேள்விக்கு, புலம் பெயர்ந்து வந்தவர்களுக்கு புகலிட உரிமை பெற்றுக் கொடுப்பதற்கான செயல்களிலும், போராட்டங்களிலும் ஈடுபடுவதுடன் பல்கலைக்கழகங்களில் நிகழும் முள்ளிவாய்க்கால் போன்ற நினைவேந்தல் நிகழ்வுகளில் பங்கேற்று வருவதாகவும் குறிப்பிட்டார்.
வளர்ந்த சூழலின் பாதிப்பின்றி, குடும்பப்பாசம் நிறைந்தவராக மனிதாபிமான சிந்தனைகள் நிறைந்தவராக ஜொனதனை அறிந்திருந்ததால் எவ்வாறு ஒரு மனித நேயமுள்ள மனிதராக வளர்த்தீர்கள் என்ற கேள்வியைக் கேட்டே ஆக வேண்டும் என்று தோன்றியது. தாய் ஆசிரியராக இருந்தமையால் அவரை ஒழுக்க நெறி கொண்டவராக வளர்த்ததாகவும், தமிழ்ப்பண்பாடுகள் பற்றிச் சொல்லி கொடுத்து வளர்ந்தமையால் நற்குடிமகனாக வளர்ந்திருக்கின்றான் என்று மகனைப் பற்றிக் கூறிப் பெருமைப்பட்டுக் கொண்டார். ஜொனதன் குடும்பத்தினரிடம் அன்பும் அக்கறையும் கொண்டவர் என்பதுடன் தங்கையில் எப்போதும் பரிவு காட்டும் அண்ணன் என்பதையும் பெருமையுடன் குறிப்பிட்டார். கோழி, ஆடுகளை எப்படிக் கொன்று அவற்றின் இறைச்சியை விற்பனைக்குக் கொண்டு வருகின்றார்கள் என்பதைத் தெரிந்து கொண்ட ஜொனதன் அன்றுடன் மாமிசம் சாப்பிடுவதை விட்டு விட்டார் என்றும் தந்தை கூறினார்.
ஜொனதன் மக்களுக்கு என்ன செய்ய விரும்புகின்றார் என்ற கேள்விக்கு, கவுன்சிலராக இருந்த போது வீட்டுப் பிரச்சனைகள் பற்றியும் வீடில்லாமல் தெருவில் வாழ்பவர்களின் துயரங்கள் பற்றியும் ஜொனதன் நன்கு அறிந்தவர் என்பதால் வாழ்வதற்கு தலைக்கு மேல் கூரை ஒன்று இருக்க வேண்டியதன் அவசியத்தை நன்றாக உணர்ந்திருந்தார் என்றும் அதனால் வாழ்விடத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர் என்று கூறினார். அதே போன்று அகதிகள் என்ற பெயருடன் நான்கு சுவருக்குள் அடைத்து வைத்து விட்டு தேவையானவற்றை வழங்குகின்றோம் என்று அரசாங்கம் சொல்வதனை ஏற்றுக் கொள்ளாமல் கூண்டில் வாழும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான சுதந்திர வாழ்வுக்காய் அடிக்கடி போராட்டங்களில் ஈடுபட்டு வருபவர் என்றும் அதனால் ஜொனதன் கைததாகியிருந்தாலும் அகதிகளின் விடுதலை சாத்தியமாகி இருக்கின்றது என்றும் குறிப்பிட்டார். இயற்கையிலும் அதன் சமநிலையிலும் அக்கறை கொண்டவர் என்பதால் தெருவை நிறைக்கும் வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைப்பதன் மூலம் சூழல் மாசடைதலைத் தவிர்க்க, துவிச்சக்கர வண்டிப்பாதையையும் பேருந்துப் பாதையையும் அதிகரிக்க வேண்டும் என்று போராடுபவர் என்றும் குறிப்பிட்டார். ஜொனதன் வார்த்தைகளில் மட்டும் வாழ்ந்து கொண்டிருக்காமல் சொல்வதைச் செயலிலும் காட்டுபவர் என்பதால் அவரைத் துவிச்சக்கரவண்டியில் அடிக்கடி காணக் கூடியதாக இருக்கின்றது என்பதை நாமும் அறிவோம்
குற்றச்செயல்கள் பெருகுகின்றன என்றால் முதலில் அதற்கான மூலத்தைக் கண்டு பிடித்துத் தீர்வு காண வேண்டுமே தவிர மேலெழுந்தவாரியாக தீர்வுகளைக் காணக் கூடாது என்பதை ஜொனதன் அழுத்தந்திருத்தமாக வலியுறுத்துபவர். வீடுகளை உடைப்பவர்கள், கடைகளில் திருடுபவர்களின் அடிப்படைப் பிரச்சனையை அறிந்து கொண்டு அதைத் தீர்க்க முயல வேண்டும் என்று சமுதாய அக்கறையுடன் பேசுபவர் என்றும் தந்தையார் கூறினார்.
ஜொனதன் அவர்கள் பிறிஸ்பேன் நகர ஆளுனர் பதவிக்காகப் போட்டியிடுகின்றார் என்றவுடன் அவருக்கு மக்களிடைய இருந்த செல்வாக்கு, எதிர்க்கட்சிக்கு மிகுந்த அச்சத்தைக் கொடுத்திருக்க வேண்டும். அதனாலேயே எதிர்க்கட்சியானது அவருக்கெதிரான பிரச்சாரங்களை அனைத்து சமூக ஊடகங்களிலும் முடுக்கி விட்டிருந்தது. ஆளும் கட்சிக்குக் கொடுத்த முக்கியத்துவத்தை விட ஜொனதனுக்கு எதிரான பிரச்சாரத்துக்காகவே பெரும் தொகையான பணத்தை எதிர்க்கட்சியானது செலவழித்திருந்தமை ஜொனதனின் செல்வாக்கையும் வளர்ச்சியையும் காட்டுகின்றது என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இலங்கையில் இருக்கும் அரசியலுக்கும் வளர்ச்சியடைந்த நாகரிகமான நாடான அவுஸ்திரேலிய நாட்டு அரசியலுக்கும் என்ன வேறுபாடு என்று பெரும் எதிர்பார்ப்புடன் அடுத்த கேள்வியைக் கேட்டேன். கிடைத்த பதில் என்னை மௌனியாக்கியது. இரண்டுமே கிட்டத்தட்ட ஒன்றுதான் என்று குறிப்பிட்டவர் அங்கு போல இங்கு உடல் ரீதியாகத் தாக்குதல் நடக்காவிடினும் உளரீதியாகத் தாக்கி, ஒரு மனிதனின் தன்னம்பிக்கையைச் சிதைத்து விடுவது போன்ற கேவலமான பிரச்சாரங்கள் நடைபெறுகின்றன என்று குறிப்பிட்டார்.
இனரீதியாக ஏதாவது பாகுபாடு காட்டப்படுகின்றதா என்ற எனது அடுத்த கேள்வியும் பெரும் எதிர்பார்ப்புடனேயே கேட்கப்பட்டது.
நிச்சயமாக இருக்கின்றது என்று குறிப்பிட்டவர், உனது நாட்டுக்கே திரும்பச் சென்று விடு! வெள்ளையல்லாதவனுக்கு வாக்களிக்கக் கூடாது! இவன் இங்கு வாழத் தகுதியற்றவன்! என்பது போன்ற ஜொனதனுக்கு எதிரான கருத்துக்கள் ஊடகங்களில் மலிந்து காணப்பட்டன என்று வேதனையுடன் குறிப்பிட்டார்.
ஒரு தந்தையாக இப்போது உங்கள் மனதில் என்ன ஓடுகின்றது என்று கேட்ட போது, மகனுக்கான பிரச்சாரங்களில் குடும்பமாக ஈடுபட்டு, மகனின் வெற்றிக்காக உழைத்தும் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை என்பதை விட, இன்று வரையில் சொந்தமாக வீடு ஒன்று வாங்காமல் படகு வீடொன்றில் ஜொனதன் குடியிருப்பதாகவும், கிடைக்கும் சம்பளத்தில் பாதிக்கு மேல் தர்ம காரியங்களுக்காகக் கொடுத்து விடுவதாகவும் ஒரு தந்தையாக வேதனையுடன் குறிப்பிட்டார்.
இதே நேரம் ஜொனதன் அவர்களும் இணைந்து கொண்டார்.
பாலஸ்தீனியத்தில் நடக்கும் சண்டை பற்றியும் அநியாயமாக அப்பாவி உயிர்கள் பலியாவது பற்றியும் தன் துயரைப் பகிர்ந்து கொண்டவர், அதிகரித்து விட்ட தொழினுட்ப வசதிகளால் படுகொலைகள் பற்றிய படங்களும் படப்பதிவுகளும் இப்போது வெளியில் வந்து பாலஸ்தீனியத்தின் நிலையை உலகுக்குப் புரிய வைக்கின்றன என்றும் இதே போன்ற படுகொலைகள் ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் நடந்த போது அவை எதுவுமே வெளியில் தெரிய வரவில்லை என்றும் வருத்தப்பட்டார். படுகொலைகள் பற்றி உலக நாடுகள் மௌனமாக இருக்கின்றமை பற்றிய தன் வேதனையையும் பகிர்ந்து கொண்டார்.
முன்னைய தேர்தலில் 5.2%ஆக இருந்த வாக்குகள் இம்முறை 23 சதவீதமாக அதிகரித்ததை ஒரு வெற்றியாகவே கருத வேண்டும் என்று குறிப்பிட்டவர் தோல்விக்கான காரணங்கள் பற்றிக் கேட்ட போது, கவுன்சிலராக இருந்த போது தனது உண்மையான முகத்தை எல்லோரும் அறிந்திருந்தார்கள் என்றும் ஆளுனருக்காகப் போட்டியிட்ட போது பிரதான கட்சிகளின் போலிப்பிரசாரங்கள் தன்னைப் பற்றிய ஒரு பொய்யான விம்பத்தை உருவாக்கி அதுவே உண்மை என்று மக்களின் மனதில் பதிய வைத்து விட்டதாகவும் கூறினார்.
ஜொனதன் ஆளுனராக வந்தால், வீட்டை உடைத்துக் கொள்ளையடிப்பது எப்படி என்று கற்றுக் கொடுப்பார், கார் ஓட்டுவதற்கான பதிவுக்கட்டணம் முதல் மற்றைய வரிகளையும் செலவீனங்களையும் கூட்டுவார், சைக்கிள்களில் பயணம் செய்ய வேண்டி வரும், வீட்டுப்பிராணிகளை பதிவு செய்ய அதிக பணம் கொடுக்க வேண்டும், பிரதான நேரத்தில் இவர் முன்னெடுக்கும் போராட்டங்களால் வாகன நெரிசல் அதிகரிக்கும், வாகனங்களை ஓட்டும் வேகம் 30 ஆகக் குறைக்கப்படும். குப்பைகள் ஒழுங்காக எடுக்கப்படமாட்டாது, குழப்பவாதியின் அரசியலாக இருக்கும் போன்ற திரிபுபட்ட பிரச்சாரங்களுக்கு அதாவது அவரது குணநலனுக்கு முற்றிலும் முரணான பிரச்சாரங்களுக்கு 2 மில்லியன் டொலர் வரையில் செலவழிக்கப்பட்டிருக்கின்றது. இப்படியான பிரச்சாரங்கள் சமூக ஊடகங்களில் அடிக்கடி வரும் போது யாருக்கு வாக்களிப்பது என்ற தெளிவில்லாதவர்கள் இலகுவாகக் குழம்பி விட்டார்கள் என்றும் அதை முறியடித்து பிரசாரம் செய்ய தம்மிடம் ஊடகவசதியோ, பணவசதியோ இருக்கவில்லை என்றும் குறிப்பிட்டார். தாம் தமது பிரச்சாரத்துக்காக $7000 வரையில் மட்டுமே செலவழித்ததாகவும், பொய்ப்பிரசாரங்களைத் தம்மால் முறியடிக்க முடியவில்லை என்றும் குறிப்பிட்டார்.
நகரப்பகுதிகளில் தமக்கு அதிகளவில் வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்த்த வாடகைக்குக் குடியிருப்போரும், இளைஞர்களும் வாக்களிப்பதில் பெரும் ஆர்வம் காட்டவில்லை என்றும், இளைஞர்களில் இங்கு குடி வந்தோரோ அல்லது குடி பெயர்ந்து வேறு மாநிலங்களுக்குச் சென்றோரோ, அதைப்பற்றிய பதிவுகளைச் செய்து வாக்களிக்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.
அத்துடன் கிறீன் கட்சியினர் அறிமுகமில்லாத இடங்களில் விருப்பு வாக்குகள் யாவும் லேபருக்கே கிடைத்தன என்றும் அந்த இடங்களில் தாம் பிரச்சாரம் செய்யத் தவறி விட்டமையும் தோல்விக்கான காரணமாகக் கூறியிருந்தார். வீட்டுக்கு வீடு சென்று பிரச்சாரம் செய்ய மட்டுமே தம்மால் முடிந்தது என்றும் அதுவும் வெல்லக்கூடிய இடத்தில் தாம் அதிக நேரத்தைச் செலவழித்து விட்டதாகவும் சொல்லியிருந்தார்.
தேர்தலன்று துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தபோது, தமது எதிர்காலத்திட்டங்களைப் பற்றி அறிந்து கொள்ள விரும்புகின்றீர்களா என்று வாக்காளர்கள் சிலரிடம் கேட்டபோது “உங்களைப் பற்றி மிக நன்றாகவே தெரியும், அதை உம் வாயால் மீண்டும் கேட்க வேண்டியதில்லை” என்று மனதைக் காயப்படுத்தும் விதமாகப் பலர் சொன்னது வருத்தத்தைக் கொடுத்தது என்று கூறி இருக்கின்றார். ஊடகங்கள் நினைத்தால் ஒரு மனிதனைக் கேவலமாகச் சித்தரிக்க முடியும் என்பதற்கும் வெற்றிக்காகப் பலம் வாய்ந்த கட்சிகள் தமது வெற்றிக்காகக் கீழ்த்தரமான காரியங்களிலும் ஈடுபடக்கூடும் என்ற உண்மைக்கு ஜொனதனின் வெற்றி பலியாகி இருக்கின்றது என்றுதான் கூற வேண்டும்.
மனவேதனையினால் தூக்கத்தில் பற்களை நறநறுக்கின்றீர்கள் என்று பல் வைத்தியர் சொல்லியிருப்பதும் எப்படி இருக்கின்றாய் என்ற நண்பர்களின் பதிலுக்குப் பொய்யைச் சொல்ல முடியாமல் மௌனமாக இருப்பதையும் ஜொனதன் குறிப்பிட்டது சொல்லாத பலகதைகளைச் சொன்னதாகவே எனக்குப் பட்டது.
எதிர்காலத்திட்டங்கள் என்று குறிப்பிடும் போது, இளைஞர்களை சரியான பாதையில் வழி நடத்த பணம் ஒதுக்கப்பட வேண்டும், இளைஞர்களின் குற்றச்செயல்களை அடக்க நியாயமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், சரியான வீடமைப்புத் திட்டங்கள் உருவாக வேண்டும், குதிரையோட்ட மைதானங்கள் மக்களுக்காக ஒதுக்க வேண்டும், சூதாட்டம் ஒழிக்கப்படவேண்டும், அநியாய வாடகை உயர்வுகள் நிறுத்தப்படவேண்டும், கார்ப்பாதைகளை விட பேருந்துப்பாதைகள் அதிகரிக்கப்பட வேண்டுமென்பது போன்ற சூழலுக்கும் சமூக நலனுக்குமான திட்டங்களை வைத்திருக்கும் ஜொனதன் இப்போது சிறிது ஓய்வெடுத்துக் கொண்டாலும் ஒரு நல்ல மனிதன் நாளைய தலைவன் ஆக வரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு எம்மிடம் இருக்கின்றது. அரசியல் பற்றித் தெரிந்து கொண்டவர், இப்போது அனுபவத்தால் அதன் நெளிவு சுழிவுகளைப் பற்றியும் தெரிந்து கொண்டு விட்டிருப்பதால் அதற்கேற்ற மன உறுதியுடன், இளைஞர்களை ஒருங்கிணைத்து இன்னமும் முனைப்புடன் புது யுகமொன்றைப் படைக்கத் தயாராவார் என்ற நம்பிக்கையுடன் வாழ்த்துக் கூறி, தந்தையினதும் தனயனதும் நேரத்துக்கு நன்றியும் கூறி உரையாடலை முடித்துக் கொண்டேன்
இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்ததா?
உங்கள் விருப்பத்தைத் தெரிவியுங்கள், நண்பர்களுடன் பகிருங்கள்.
