தொழினுட்பம் எமது வாழ்க்கையோடு பிரிக்க முடியாதபடி இணைந்து விட்டாலும் அவ்வப்போது சிலரது வாழ்க்கையைக் கீறித் தன் கூர்மையைப் பரிசோதித்துப் பார்த்து விட்டும் செல்கின்றது. தாய்வீடு இதழில் வெளி வந்த “சமூக வலைத்தளங்கள் எனும் சிலந்தி வலையில்” என்ற கட்டுரை.
“தீதும் நன்றும் பிறர் தர வாரா, செய்தான் செயல் கேடும் நன்றும் தரும்” என்ற நன்னூலின் நல்வாக்கானது வாழ்க்கையின் எந்த நிலைக்கும் பொருத்தமான ஒரு கூற்றாகவே இருக்கின்றது. அசுர வேகத்தில் வளர்ந்து எம்மை அடிமையாக்கத் துடிக்கும் தொழினுட்பத்தையும் சமூக வலைத்தளங்களையும் கையாளும் போது இந்த அறிவுரையின் உட்பொருளை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். நன்மையும் தீமையும் தாமாக எம்மை வந்து சேர்ந்து விடுவதில்லை. எமது செயற்பாடுகள்தாம் எம்மை ஆக்கபூர்வமான பாதையில் நடத்திச் செல்கின்றனவா அல்லது அழிவை நோக்கி அழைத்துச் செல்கின்றனவா என்பதைத் தீர்மானிக்கின்றன.
மனிதனின் நாளாந்த வாழ்க்கையானது விஞ்ஞானத்தினதும் தொழினுட்பத்தினதும் வளர்ச்சியால் முற்று முழுதாக மாறி விட்டிருக்கின்றது. அன்றைய காலத்தில் சிந்தனைக்கலைப்பான்கள் அதிகமிருக்கவில்லை என்பதால் வாழ்க்கை சீராகவே ஒடிக் கொண்டிருந்தது. இன்று தவிர்க்க முடியாத தேவையாய் தொழினுட்பத்தைக் கையில் எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கின்றது. இந்த வளர்ச்சியால் நாம் அனுபவித்துக் கொண்டிக்கும் நன்மைகளுடன், அறிந்திருக்கின்ற மற்றும் அறிந்திராத தீமைகளும் சேர்ந்தேதான் பயணிக்கின்றன. அதனால் தொழினுட்பத்தால் விளையக் கூடிய தீமைகளைத் தவிர்க்கவோ குறைக்கவோ முயற்சிகள் எடுக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது.
சமூக ஊடகங்கள் தகவல்களை இலகுவில் பரிமாறிக் கொள்ள உதவுகின்றன, தொலைதூரங்களைக் கடந்து உறவுகளையும், நட்புகளையும் இணைக்கின்றன, செய்திகளை உடனுக்குடன் அறிவிக்கின்றன என்பன நன்மைகளாகக் கூறப்பட்டாலும், சமூக வலைத்தளங்களின் பின்னணியில் கண்ணுக்குத் தெரியாத பல ஆபத்துகள் ஒளிந்திருக்கின்றன. பக்குவமில்லாத பருவ வயதினர் சமூக ஊடகங்களின் வசதிகளால் ஈர்க்கப்பட்டு, அதற்குள் இருக்கும் அபாயங்களை அறிந்து கொள்ளாமல், சிலந்தி வலை போன்ற இந்த வலைத்தளங்களின் பிடிக்குள் இலகுவாகச் சிக்கிக் கொண்டு விடுகின்றார்கள்.
சமூக வலைத்தளங்கள் பல வகைகளில் சமூகத்தின் தொடர்பாடலுக்குக்கு உதவுகின்றன என்று சொல்லப்பட்டாலும், அதில் பகிரப்படும் பதிவுகள் யாவும் அறத்தைச் சார்ந்து, அடுத்தவரின் நலனைச் சிந்தித்து, நடுவுநிலை கொண்டனவாக அமைவதில்லை. உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் உறவுகளுடன் இணைந்திருப்பதற்கு சமூக ஊடகங்கள் துணை செய்கின்றன ஆயினும் மனம் விட்டுப் பேசி அன்பைப் பரிமாறிக் கொள்வதற்கான நேரத்தை அவை தின்று தீர்த்து விட்டிருக்கின்றன. செய்திகளைச் செலவின்றி அனுப்பக்கூடிய வசதி இருப்பதால் சரியாகத் தெரியாதவர்களுடனும், சரி வரப் புரிந்து கொள்ளாதவர்களுடனும் முறையற்ற தொடர்புகள் ஏற்பட வாய்ப்புகள் உருவாகின்றன. இவற்றால் கலாசாரச் சீரழிவு ஏற்படுவது மட்டுமல்லாமல், நிலைத்திருக்க வேண்டிய குடும்ப உறவுகளிலும் விரிசல் ஏற்பட்டு விடுகின்றது.
பருவத்தின் பக்குவமற்ற வயதிலோ அல்லது உத்தமமான உறவென்று நம்பியோ அன்பை மட்டுமல்லாமல் தம் இரகசியங்களையும், பிரத்தியேகச் செய்திகளையும் படங்களையும் பின்விளைவுகளைப் பற்றிச் சிந்திக்காமல் பகிர்ந்து கொள்கின்றார்கள். அந்தப் பழக்கமானது, எப்போதும் நிரந்தரமான உறவில் முடிந்து விடுவதில்லை. இதனால் பழைய உண்மைகள் ஆதாரத்துடன் என்றாவது ஒருநாள் வெளிப்பட்டு, வாழும் வாழ்க்கைக்கு உலை வைத்து விடுமோ என்ற அச்சத்தைச் சிலுவையாக வாழ்நாள் பூராவும் சுமக்க நேரிட்டு விடுகின்றது.
தொழினுட்பம் முன்னேறி விட்ட காலத்தில், இல்லாததைக் கூட இருப்பதாகக் காட்டும் வசதிகள் வந்து விட்டிருக்கின்றன. போதித்த கலாசாரமும், வளர்ந்த சூழலும் மான அவமானத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென்று பெண்ணுக்குத்தான் அதிகமாய்ச் சொல்லிக் கொடுத்திருக்கின்றன. அதனால் தான் பழிவாங்குதலின் உச்சக்கட்டமாகப் பெண்களின் புகைப்படங்கள் திரிபுபடுத்தப் படுகின்றன. அவமானப்படுத்த நினைக்கும் முகங்களை நிர்வாணப்படங்களுக்கு இணைப்பது, தவறான தொடர்பிருப்பது போன்று சித்தரிப்பதற்காக எடுத்திராத புகைப்படங்களை மாற்றியமைப்பது போன்ற செயல்கள் பாதிக்கப்பட்டவரை மன உளைச்சலுக்கு ஆளாக்குவதுடன், தவறான முடிவுகளை எடுக்கவும் தூண்டுகின்றன. இதனால் இணையத்தளங்களிலோ அல்லது பொது வெளியிலோ படங்களைப் பகிரந்து கொள்ளும் போது மிகவும் அவதானமாக இருப்பது அவசியமாகின்றது.
சமூகவலைத்தளங்கள் ஆற்றலுள்ள ஒருவரை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன என்று கூறுகின்றார்கள். அறிமுகமானவர்கள், நாகரிகம் தெரிந்தவர்கள், மனித விழுமியங்களை மதிப்பவர்கள் நல்ல வார்த்தைகளையும் நல்வாழ்த்துகளையும் ஆக்க பூர்வமான கருத்துகளையும் பகிர்ந்து திறமையுள்ளவர்களை மேலும் ஊக்குவிக்கின்றார்கள். ஆனால் வக்கிரம் பிடித்தவர்கள், அநாகரிகமான வார்த்தைகளைப் பாவித்துத் தம் காழ்ப்புகளைக் கொட்டித் தள்ளுவதால், பலர் தம் திறமைகளில் நம்பிக்கை சிதைந்து போய் மனமுடைந்தவர்களாய் முடங்கிப் போய் விட்டிருப்பது வெளியுலகத்தின் பார்வைக்குத் தெரிய வருவதில்லை.
செயற்கை நுண்ணறிவு என்பது தொழினுட்ப வளர்ச்சியின் அடுத்த பரிமாணம் ஆகும். மொழிபெயர்ப்பது, தகவல்களைத் திரட்டிச் சுருக்கித் தருவது, செய்ய வேண்டிய வேலையைச் சிறப்பாக்கித் தருவது என்று எத்தனையோ விதங்களில் உதவினாலும், தம் சுயஅறிவு சார்ந்து இருக்க வேண்டிய ஒரு தலைமுறையை அழித்துக் கொண்டிருக்கின்றது என்பது வருத்தத்தைத் தருவதாகும். முன்னைய காலத்தில் கற்பதை எல்லாம் விளங்கிப் புரிந்து கொண்டு, மாணவர்கள் செயன்முறைப் பரீட்சைகளையும், ஒப்படைகளையும் செய்வார்கள். இப்போதோ செயற்கை நுண்ணறிவு செய்து தருவதில், சில மாற்றங்களைச் செய்து கொடுத்து விட்டுத் தமது கல்வித் தேவையைப் பூர்த்தி செய்து கொள்கின்றார்கள் இவர்களிடம் விடய சம்பந்தமான பூரண அறிவு இருக்குமா என்பது கேள்விக் குறியே. சிக்கலான விடயங்களில் தீர்க்கமான முடிவை எடுக்கக் கூடிய அறிவுசார் எதிர்கால சமுதாயத்தை இழந்து கொண்டிருக்கின்றோம் என்பது பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய ஒரு விடயமே.
ஆரோக்கியமாக இருக்க வேண்டிய வருங்கால சமுதாயத்தின் மன நலனையும், செயலாற்றலையும் சமூக ஊடகங்களுக்குப் பகடைக்காயாக ஆக்கியிருக்கின்றோம் என்பது அடுத்ததொரு பாதிப்பாகும். சூழலைப் புரிந்து கொண்டு, நிகழ்வுகளைக் கிரகித்து மூளையின் பகுப்பாற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டிய சிறுவர்களின் கையில் தொலைபேசியைக் கொடுத்து விடுவதால் அப்போதையத் தலைவலி தீர்ந்ததாக நினைத்துக் கொள்கின்றோம். தனித்து வாழும் பெற்றோர், பிள்ளையின் கவனத்தைத் திசை திருப்பி விட்டுத் தம் அன்றாட வேலைகளைக் கவனிப்பதற்காக சமூக ஊடகங்களின் உதவியை நாடுகின்றார்கள். நன்னெறிகளை அறிந்து நற்குணங்களைப் பயிரிட்டுக் கொள்ள வேண்டிய சிறார்ப்பருவத்தினர் வன்முறையான விளையாட்டுகளில் தமது நேரத்தைச் செலவழிக்கத் தொடங்குகின்றார்கள். சிறு உயிரினத்துக்குக் கூட தீங்கு விளைவிக்கக் கூடாது, சக உயிர்களில் அன்பு செலுத்த வேண்டும் என்று நல்லொழுக்கத்தைப் புகட்ட வேண்டிய நேரத்தில், எதிரில் காண்பவனை அழித்து அவனது உடைமைகளைக் கைப்பற்றினால்தான் தமக்கான இருப்பு உறுதிப்படுத்தப்படுகின்றது எனும் மனப்பான்மையை வளர்க்கும் விளையாட்டுகளால் சிறுவர்களின் மனநிலையும் மாறுகின்றது. அன்பை அடிப்படையாகக் கொண்டு வளர வேண்டிய குழந்தைகள், தம்மை மட்டும் சிந்தித்து வாழும் சுய நலமுள்ளவர்களாக மாறுவதற்கு இப்போதுள்ள விளையாட்டுகளும் ஒரு காரணமாகின்றன.
சமூக ஊடகங்கள் ஆக்க பூர்வமாக இருக்க வேண்டிய எமது நேரத்தையும், உடல் உழைப்புக்கும் உடற்பயிற்சிக்குமான பொழுதுகளையும் எடுத்துக் கொண்டு எம்மை மந்தமாக்கி விடுகின்றன. இவற்றால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் தெரிய வரும் போது அவை மீட்டுக் கொள்ள முடியாத தாக்கமாகவே இருக்கப் போகின்றன.
அர்த்தமுள்ளதாகவும் உறவுகளை அழுத்தமாக்க வேண்டியதுமான கொண்டாட்டங்கள் இன்று ஆடம்பரத்தை உலகுக்குப் பறை சாற்றுவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருக்கின்றன. ஒரு பதிவுக்கு எத்தனை விருப்பு வாக்குகளும், கருத்துகளும் என்று எண்ணுவதில் பொழுதைச் செலவிடுகின்றோமே தவிர அந்த மகிழ்ச்சியான தருணங்கள் கொடுக்கக்கூடிய உண்மையான அர்த்தத்தை உணர மறந்து விடுகின்றோம். வலது கை கொடுப்பது இடது கைக்குத் தெரியக் கூடாது என்பார்கள். ஆனால் தாம் உதவி செய்வதை ஒளிப்பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்வதன் மூலம் தம்மைப் பிரபல்யப்படுத்த நினைக்கிறார்களே தவிரப் பெறுபவரின் தன்மானத்துக்கு மதிப்புக் கொடுக்க மறந்து விடுகின்றார்கள். அதே போன்று ஆபத்தில் ஒருவர் இருக்கும் போது அந்த நிகழ்வைப் பதிவு செய்து ஆதாயம் தேட முயற்சிக்கின்றார்களே தவிர, உதவி செய்து காப்பாற்ற வேண்டும் என்ற அடிப்படையான மனிதாபிமானத்தை மறந்து விடுகின்றார்கள்.
வெறும் விருப்பு வாக்குகளுக்காகவும் அதிகம் பேர் பார்க்க வேண்டும் என்பதற்காகவும் ஆபாசமாகவோ அல்லது அடுத்தவரைக் கேவலமாகப் பேசியோ ஒளிப்படங்களைப் பதிவேற்றுவதன் மூலம் ஒரு சமூகத்தின் முகத்தைத் தவறாகச் சித்தரித்துக் கொண்டிருக்கின்றோம். முன்பானால் இலைமறை காயாக மட்டுமே சில விடயங்கள் சமூகத்துக்குத் தெரிந்திருந்தன. இப்போதோ எல்லா விடயங்களும் இணையத்தில் தாராளமாகக் கிடைக்கின்றன. தற்கொலை செய்வது எப்படி? வெடி குண்டுகள் தயாரிப்பது எப்படி? திருடுவது எப்படி? மாட்டிக் கொள்ளாமல் குற்றங்களைச் செய்வது எப்படி? என்றெல்லாம் அக்குவேறு ஆணி வேறாக அலசி ஆலோசனை தருகின்றன. இதனால் சமூகத்தில் குற்றங்கள் மலிந்து போயிருக்கின்றன.
சமூக வலைத்தளங்கள் நேரில் சந்திக்காதவர்களைக் கூட நண்பர்களாக, காதலர்களாக, வாழ்க்கைத்துணையாக அறிமுகப்படுத்தி வைத்து விடுகின்றன. ஒருவரைப் பற்றிச் சரியாகத் தெரிந்து கொள்ளாமல் பழகத் தொடங்கி பெரும் சிக்கலுக்குள்ளான சம்பவங்களுடன், தவறான தொடர்புகளால் வாழ்க்கையின் போக்கே மாறித் துன்பச்சுழலில் மீள முடியாமல் சிக்கிக்கொண்டவர்களும் இருக்கின்றார்கள். சமூக ஊடகங்கள் மூலம் தொடர்பாடல் எளிதாவதால், வெளித் தொடர்புகள் அதிகரித்து விட, குடும்ப உறவுகள் இடையே நெருக்கமோ, நம்பிக்கையோ இல்லாமற் போகின்றது. இதனால் உறவுகளுக்கு ஆணிவேராக இருக்க வேண்டிய நம்பிக்கை அறுந்து போய் விட, குடும்ப உறுப்பினர்களை உளவு பார்ப்பது, சந்தேகப்படுவது போன்ற இழிதரமான வேலைகளுடன், மணமுறிவுகளும் அதிகரித்து விட்டிருக்கின்றன.
தொழினுட்பத்தின் வசதிகளுடன் தொலைபேசியின் மென்பொருளிலும் முன்னேற்றம் ஏற்படுவதால் அடிக்கடி தொலைபேசியை மாற்றுவோரின் எண்ணிக்கை அதிகரித்திருக்கின்றது. இதனால் இலத்திரனியல் கழிவுகள் சூழலில் அதிகமாக வெளியேற்றப்படுகின்றன. சூழலில் இவை ஏற்படுத்தும் பாதிப்பையோ சூழல் மாசடைவதையோ யாரும் கணக்கில் எடுப்பதாகத் தெரியவில்லை.
தொழினுட்பம் இளையவர்களின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் தாக்கங்களைக் கட்டுப்படுத்த இப்போது சில விதிமுறைகளும் சட்டங்களும் அமுல்படுத்தப் பட்டிருக்கின்றன. வாகனம் ஓட்டும் போது கைத்தொலைபேசிப்பாவனைத் தடை என்ற சட்டம் அமுலுக்கு வருவதற்கு முன்னர், தொலைப்பேசியில் பேசுவதன் மூலமோ, குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலமோ எத்தனை விபத்துகள் நிகழ்ந்து அன்புக்குரியவர்களை இழந்து விட்ட சம்பவங்கள் நடந்து விட்டிருக்கின்றன. தரவுகளைத் தேடித் தரம் பிரித்து, விளைவுகளைப் புரிந்து, சட்டமொன்றை அமுல்படுத்த முன்னர் ஒரு தலைமுறையின் அழிவை நோக்கிய பாதையானது ஆரம்பித்து விட்டிருக்கக் கூடும். இன்று பாடசாலை வளவுக்குள் தொலைபேசிப்பாவனை தடை செய்யப்பட்டிருக்கின்றது. வலைத்தளங்களின் பாவனை கட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றது என்பது ஆறுதல் தரும் செய்திகளாக இருந்தாலும், தொழினுட்பத்திலுள்ள நெளிவு சுழிவுகளைக் கைவசம் வைத்திருக்கும் இன்றைய இளையவர்கள் அந்தத் தடைகளைத் தாண்டி தம் தேடலைத் தொடர்வார்கள் என்பது அச்சம் தருவதொன்றே.
வீதிக்கு வீதி பொருத்தி வைத்திருக்கும் ஒளிப்பதிவுக்கருவிகள் பாதுகாப்புக்காக என்று சொல்லப்பட்டாலும் எமது நடமாட்டங்கள் கண்காணிப்பட்டுக் கொண்டிருப்பதன் மூலம் தனிமனித சுதந்திரம் பாதிக்கப்படுகின்றது என்பதே உண்மை. வெளிக்குத் தெரியாத கருவிகள் மூலம் தனி மனிதனின் வாழ்க்கையின் அந்தரங்கங்களை இரகசியமாகப் பதிவு செய்யும் சம்பவங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. எதைப் பற்றியும் கவலைப்படாமல் வாழ்ந்த காலம் போய், கஷ்டப்பட்டு உழைத்த பணம் களவாடப்படுமா, எமது அடையாளம் திருடப்படுமா என்று கண்ணுக்குத் தெரியாத ஆபத்துக்கு அஞ்சி வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றோம். இந்த அபாயம் பற்றி அறிந்திராத, மனிதர்கள் மீது நம்பிக்கை கொண்ட முதியவர்கள் தம் எஞ்சிய காலத்துக்கெனச் சேர்த்து வைத்த பணம் முழுவதையும் இழக்கும் நிகழ்வுகளின் எண்ணிக்கை அதிகமாயிருக்கின்றது. நவீன தொழில் நுட்பத்தைக் கையாளத் தெரிந்தவர்கள், அவற்றைச் சமூக நன்மைக்காகப் பயன்படுத்தும் போது, மனித சமுதாயம் பலன் பெறுகின்றது. ஆனால் தொழினுட்பத்தைக் குறுக்கு வழியில் பாவிக்கத் தெரிந்தவர்கள் சட்டத்தின் கைகளில் அகப்பட்டு விடாமல் பலரை இன்று மன உளைச்சலுக்கும், மன அழுத்தத்துக்கும் உள்ளாக்கிக் கொண்டிருக்கின்றார்கள். ஒவ்வொரு ஆறு நிமிடத்துக்கும் ஒருவர் இணையத்தொல்லைக்கு (cyber bullying) உள்ளாகின்றார் எனும் தரவானது உதறித்தள்ளி விட முடியாத அச்சத்தைத் தருவதாகவே உள்ளது.
கைத்தொலைபேசிப் பாவனையானது உடலைச் சூடாக்குவதுடன், சோர்வு, மயக்கம், உறக்கக்குறைவு, புற்று நோய், பிள்ளைகள் பெறும் திறன், கவன சிதறல் போன்றனவற்றுக்கும் காரணமாக இருக்கின்றது. அத்துடன் தவறான தகவல்களையும், வழிகாட்டல்களையும் வழங்கி மனிதனின் வாழ்க்கையைத் திசை திருப்பி அபாயகரமான பாதைக்கு இட்டுச் செல்லக் கூடும் என்பதைப் புரிந்து கொண்டு, சமூக ஊடகங்கள் என்ற கத்தியைக் கவனமாகக் கையாள வேண்டும். வாழ்க்கையை இலகுவாக்கியிருக்கின்றது என்ற உண்மையுடன் எம்மை அழித்து விடக்கூடிய பாதகங்களையும் உருவின்றி ஒட்டியபடி செய்து கொண்டிருக்கின்றன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
சமூக ஊடகங்களை அதிக நேரம் பயன்படுத்தும் போது படிப்பு மற்றும் வேலையுடன் குடும்பவாழ்க்கையின் தரமும் பாதிக்கப்படுகின்றது. குடும்ப உறுப்பினருடன் உறுதியான அன்பிழை பேணப்பட வேண்டுமாயின், அர்த்தமுள்ள நேரம் செலவிடப்பட வேண்டும். நேர்மையுடனும் உளச்சுத்தியுடனும் பழகும் போது உறவுகளிடையே அன்பும் நம்பிக்கையும் ஆழமாகவே முளை விடுகின்றது. சமூக ஊடகங்களின் பின்னால் கண்களைக் கட்டிக் கொண்டு ஓடாமல், அர்த்தமற்ற சலனங்களும், தவறான புரிந்துணர்வும் இன்றி ஆண்டாண்டு காலத்துக்கும் நிலைத்துத் துணை நிற்கக் கூடிய உறவுகளைத் தேடுவதுதான் வாழ்க்கையில் நிலையான அமைதியைத் தரும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
உறவுகளும் நட்புகளும் எம்மைப் புரிந்து கொள்வதை விடச் சமூக வலைத்தளங்கள் எம்மை நன்றாகப் புரிந்து கொள்கின்றன என்பதை நம்பத் தொடங்கும் போது தனிமைப்படுத்தப்பட்டு விடுகின்றோம். சமூக ஊடகங்களில் திரும்பத் திரும்ப ஒரே மாதிரியான விடயங்கள் தொடர்ந்து வரும் போது, எமது சுயத்தை இழந்து நாமும் அதுவாகவே மாறி விடுகின்றோம். நிஜத்தைத் தொலைத்து விட்டு, சக மனிதர்களில் நம்பிக்கை இழந்து கற்பனை உலகில் வாழ்வதை இந்தச் சமூக ஊடகங்கள் ஊக்குவித்துக் கொண்டிருக்கின்றன என்ற விழிப்புணர்வு எம்மிடையே வராவிட்டால் எம்மை அடிமைப்படுத்தி எம் நிம்மதியைக் குலைத்து விடக்கூடிய இந்தப் பேரபாயத்திலிருந்து தப்பிப்பதற்கு வழி இருக்கப் போவதில்லை
இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்ததா?
உங்கள் விருப்பத்தைத் தெரிவியுங்கள், நண்பர்களுடன் பகிருங்கள்.
