விஞ்ஞானத்துடன் தொழினுட்பமும் முன்னேறி விண்வெளியைக் கூடத் தொட்டு விட்டோம் என்று நாமெல்லாம் வீரம் பேசிக் கொண்டிருக்கின்றோம். அதற்கான விலையாக மனிதமும் அறமும் மாறி விட்டதையும் அது சர்வசாதாரணமாக எடுத்துக் கொள்ளப்பட்டு விட்டதா என்பதைப் பற்றியும் மனட்சாட்சி கொண்ட ஆறறிவு கொண்ட மனிதன் எண்ணிப் பார்க்க வேண்டும். பூமிப்பந்தின் ஏதோவொரு பக்கத்தில் மனிதர்களின் இரத்தத்தால் பூமாதேவி தொடர்ந்து குளித்துக் கொண்டு தானிருக்கின்றாள். மதத்துக்காகவோ எல்லைகளுக்காகவோ அல்லது பொருளாதார அரசியல் காரணங்களுக்காகவோ நாடுகள் அங்கங்கே சண்டையிட்டுக் கொண்டுதானிருக்கின்றன. கொரோனா என்ற ஒரு உயிர் கொல்லி நோய் இந்த உலகைத்தாக்கிய நேரத்தில் எந்த நாடுகளும் எதற்காகவும் சண்டையிட்டுக் கொள்ளவில்லை. உயிர்ப்பயம் உலக நாடுகளைத் துரத்த அந்த நோயிலிருந்து தம்மைக் காப்பாற்றிக்கொள்ளும் வழிவகையைத் தேடினவே தவிர சண்டை பிடிப்பதற்கான காரணங்கள் அப்படியே இருந்தும் அவற்றை எல்லாம் மூட்டை கட்டி மூலையில் போட்டு விட்டிருந்தன.
இப்போது அந்தப்பயம் நீங்கி விட்டதால் தம் அழிவுக்கண்டுபிடிப்புகள் வேலை செய்கின்றனவா என்பதை மனித உயிர்களை வைத்து மதிப்பிட்டுக் கொண்டிருக்கின்றன. ஐந்தறிவு கொண்ட உயிர்களுக்காக உரிமைக்குரல் கொடுக்கத் தயாராக உள்ளவர்கள் சகமனிதனின் உயிர் பலி போவதைப் பற்றிக் கவலைப்ப்படுவதாய் தெரியவில்லை. யாரின் பக்கம் நியாயம் இருக்கின்றது என்பதை அலசுவதற்கு முதலில் இப்படியான போர்களும் உயிரிழப்புகளும் தேவைதானா என்பதை இந்தப் போர்களை வழி நடத்துபவர்களும் ஆதரவளிப்பவர்களும் ஏன் சிந்திக்க மறுக்கின்றனர்? இப்போது இஸ்ரேலிய பாலஸ்தீனத்தில் நடக்கும் நிகழ்வுகளும், நாளாந்த மரணத்தின் எண்ணிக்கைகளும் ஒரு காலத்தில் எம்மண்ணில் நிகழ்ந்த போருடன் ஒத்துப் போவதால், மனம் வலிப்பதைத் தடுக்க முடியவில்லை. எதற்காக இந்தப் போர் என்பதை அறியாத பச்சைக் குழந்தைகள் முதல் போரில் எந்த விதத்திலும் சம்பந்தப்படாதவர்கள், போரை அடியோடு வெறுப்பவர்கள் வரை எந்தப் பாகுபாடுமின்றி காரணம் தெரியாமலேயே மரணித்துக் கொண்டிருக்கின்றார்கள். போர் என்று வந்து விட்டாலே கொன்று குவிக்கப்படும் எண்ணிக்கையை வைத்துத்தான் வெற்றியா தோல்வியா என்பது தீர்மானிக்கப்படுகிறது.
பாலஸ்தீனத்துக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நிகழும் போர் இன்று நேற்று தொடங்கியதில்லை. ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் பாலஸ்தீனத்தில் அரபுக்கள் அதிகமாயும் யூதர்கள் சிறுபான்மையினராயும் வாழ்ந்து வந்தனர. உலகப்போரின் முடிவில் தம் பாதுகாப்புக் கருதி யூதர்கள் அதிகளவிலாக இப்பகுதிக்குக் குடி பெயர்ந்தனர். அப்போது நாட்டை ஆண்ட பிரித்தானியர்களின் தவறான அணுகுமுறையாலும் தீர்ப்புகளாலும் யூதர்களுக்கும் அரபுக்களுக்குமிடையேயான பிளவுகள் பெருக்கத் தொடங்கின. அதன் பின்னர் இருபகுதியினருக்குமான முறுகல் நிலை தீவிரம் பெற்று, இன்று வரையிலும் இரண்டு பக்கத்திலும் பல உயிர்கள் பலியிடப்பட்டு விட்டன. இலங்கையிலும் பிரித்தானியர்களின் ஆட்சிக் காலத்தின் போதும் அதன் பின்னரும் தமிழர்களின் ஆட்சிப்பொறுப்பு மறுக்கப்பட்டமை உள் நாட்டுப்பிரச்சனைகள் ஆரம்பித்தமைக்கு அத்திவாரமிட்டன என்பது கூட ஒரு ஒற்றுமையே.
2006ம் ஆண்டு தேர்தலின் வென்று பாலஸ்தீனத்தின் ஹாசா என்ற நிலப்பரப்பை ஆட்சி செய்து கொண்டிருப்பவர்களே இந்தக் ஹமாஸ் என்ற அமைப்பினர். இஸ்ரேலின் ஆட்சிக்குள் இருந்த ஹாசா பகுதியை இப்போது ஆட்சி செய்து கொண்டிருக்கும் இந்த அமைப்பினர் தாம் இழந்த தம் மதத்துக்கான புனித பிரதேசங்களான கிழக்கு ஜெருசலேம் உட்பட்ட சில இஸ்ரேலிய பகுதிகளை மீண்டும் இஸ்லாமிய வலயமாக பிரகடனப்படுத்துவோம் என்று சூளுரைத்துள்ளனர். மறுபுறத்தில் ஜெருசலேம் கிறிஸ்தவர்களின் புனித இடம் என்று இஸ்ரேலிய யூதர்கள் உரிமை கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். மதம் மண்ணில்தான் இருக்கின்றது என்பதன் அடிப்படையில் இரண்டு நாடுகளுமே உரிமைப்போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றன. இஸ்ரேலுக்கு அமெரிக்கா மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகள் உட்பட்ட சில மேற்கத்தைய நாடுகள் பின்புல ஆதரவைக் கொடுத்துக் கொண்டிருக்க, பாலஸ்தீனியர்களின் உரிமைக்காக அரபு நாடுகளும் இந்தியாவும் கூட குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றன.
ஹமாஸ் என்ற பாலஸ்தீன அமைப்பினர் ஐப்பசி ஏழாம் திகதி இஸ்ரேல் போட்டு வைத்திருந்த பாதுகாப்பு வேலியைத் தாண்டி இஸ்ரேலிய எல்லைக்குள் சென்று நடாத்திய அராஜகத்துக்குப் பதில் வாங்கும் நடவடிக்கையாக தொடங்கப்பட்ட பதிலடிப்போர் இன்று உச்சக்கட்டத்தை தொட்டிருக்கின்றது. சமய விடுமுறைக் காலத்தில் தளர்வாக இருந்த எல்லைப் பாதுகாப்பை உடைத்துக் கொண்டு உள் நுழைந்த ஹமாஸ் இயக்கத்தினரால் சுமார் 1200 அப்பாவிப்பொதுமக்கள் கொல்லப்பட்டும் 150ற்கும் அதிகமானோர் பயணக்கைதிகளாகச் சிறைபிடிக்கப்பட்டும் இருக்கின்றனர். போர் என்று வந்து விட்டாலே இருதரப்பிலும் இராணுவ வீரர்களின் சாவுகள் இயல்பானவை. உண்மையான ஒரு விடுதலைப் போராட்ட அமைப்பு எதிர்த்தரப்பில் அப்பாவிமக்களை கொல்லும் ஈனச்செயலைச் செய்யமாட்டாது என்பதை நாம் அறிவோம். ஆனால் இஸ்ரேலியக் குடியிருப்புக்குள் நுழைந்து பொதுமக்களைக் கொன்றமை கொடூரமான ஒரு செயலாகவே கருதப்பட வேண்டும். அதற்குப் பதிலடி கொடுக்கும் நடவடிக்கையாக இஸ்ரேல் முன்னெடுத்துக் கொண்டிருக்கும் போர் நடவடிக்கையானது ஹமாஸ் என்ற தீவிரவாதிகளை ஒடுக்குவதை மட்டும் குறிக்கோளாக கொண்டிருப்பதாக தெரியவில்லை. பாலஸ்தீனத்தில் உள்ள சாதாரண பொது மக்களும், குழந்தைகளும் எண்ணிக்கை கணக்கின்றிக் கொன்று குவிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். பயணக் கைதிகளாகப் படிக்கப்பட்ட இஸ்ரேலியர்களை மீட்கும் நடவடிக்கை என்று கூறப்பட்டாலும் சிறைபிடிக்கப்பட்டவர்களில் கிட்டத்தட்ட 50க்கும் அதிகமானோர் இஸ்ரேலின் விமான தாக்குதலில் ஏற்கனவே கொல்லப்பட்டு விட்டனர் என்பது மீட்பு நடவடிக்கைகளுக்கு முரனாண தகவல்.
ஈழத்தில் நிகழ்ந்த விடுதலை போருக்கும் இப்போது பாலஸ்தீனத்திக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான போருக்கும் இடையில் அதிகளாவிலான வேறுபாடுகள் இல்லை. ஒரு நாட்டில் பெரும்பான்மையினராக வாழும் ஒரு இனம் மற்றைய இனத்தின் மேல் அடக்குமுறைகளையும் வன்முறைகளையும் திணித்து அந்த இனத்தை ஒடுக்குவதற்காக வன்முறைகள் கட்டவிழ்த்து விடுவது என்பது எமக்குத் தெரிந்த வரலாறே. எம் நாட்டில் கொத்துக் கொத்தாய் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட போதும் உலக நாடுகள் இதே போன்று தான் அமைதியாய் இருந்தன. குழந்தைகளும், முதியோர்களும், அப்பாவிகளுமாய் ஒன்பதாயிரத்துக்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு விட்டபோதிலும் உலக நாடுகள் வாய்மூடி மௌனம் காப்பது, எம் உள்நாட்டில் நடந்த இறுதி கட்டப் போரை ஞாபகப்படுத்த தவறவில்லை. போரை நிறுத்த வேண்டும், போர்க்கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்று சில நாடுகள் ஒப்புக்கு ஓலமிட்டுக்கொண்டிருக்கின்றனவே தவிர ஆக்கபூர்வமாக போரை நிறுத்தி மக்களின் உயிரைக் காப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. அன்றும் தடை செய்யப்பட்ட பொஸ்பரஸ் குண்டுகள் தமிழர்களை கொன்று குவிக்கப் பாவிக்கப்பட்டன. இன்றும் கேட்பதற்கு ஆளின்றி அதே குண்டுகள் பாதிக்கப்படுகின்றன. போர் என்று வந்து விட்டால் நியாயம், தர்மம், போர்க்குற்றம் என்ற நெறிமுறைகள் எவையுமே பின்பற்றப்படுவதில்லை என்பது தான் வரலாறு சொல்லும் பாடம். அன்று மூக்கு நீண்ட உலங்கூர்திகள் தமிழர்களின் வான்பரப்பில் பறந்தாலே தமிழர்கள் கிலி கொள்வார்கள். அவை இஸ்ரேலியத் தயாரிப்புகள் என்பதுதான் இஸ்ரேல் என்ற நாட்டை எமக்கெல்லாம் அறிமுகப்படுத்திய விதம் என்பதையும் இங்கு குறிப்பிட்டேதான் ஆக வேண்டும்.
தமிழினத்தின் மீது பொருளாதாரத் தடையை விதிப்பதன் மூலம் போராட்டத்தை ஒடுக்கி விடலாம் என்று சிங்கள அரசாங்கம் தீர்மானம் செய்து தமிழர் பகுதிகளுக்கான உணவு, மருத்துவசதி மற்றும் போக்குவரத்தை முற்று முழுதாகத் தடை செய்தது. அதே போன்று இன்றும் ஹாசாப்பகுதிக்கான உணவு, மருந்து, மின் தடையுடன் நீர் விநியோகத்தையும் இஸ்ரேல் முற்று முழுதாகத் தடை செய்து விட்டிருக்கின்றது. இயற்கை வளங்கள் குறைந்த பகுதியான ஹாசாவில் வாழும் மக்களுக்கு அடிப்படைத் தேவையான குடிநீர் விநியோகம் முற்றாகத் தடை செய்யப்பட்டிருக்கின்றது. 1.7 மில்லியன் கணக்கிலாக வாழ்ந்த மக்களில் 75% மானோர் இன்று உண்ண உணவின்றி அருந்துவதற்குக் குடிநீருமின்றி அகதிகளாக அலையும் அவல நிலைக்கு ஆளாகியிருக்கின்றார்கள். நாளாந்த குடிநீர் தேவையில் ஐந்து சதவீதமான அளவு தண்ணீர் மட்டுமே கிடைக்கக்கூடிய நிலைமையில் குழந்தைகள் நீரிழப்பினால் மடியக்கூடிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, ஹாசாவில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களில் 80சதவீதத்தினர் வறுமைக்கோட்டுக்குக் கீழ்தான் வாழ்பவர்கள். இங்கு வேலையில்லாதவர்களின் சதவீதம் 46 என்று புள்ளிவிபரம் சொல்கின்றது. வறுமையுடன் போராடுபவர்கள் இப்போது உயிரைக் காப்பாற்றவும் போராட வேண்டிய இருக்கின்றார்கள் என்ற உண்மை வேதனைக்குரியதொன்றே.
பேரழிவைச் சந்தித்துக் கொண்டிருக்கும் ஹாசா எல்லைப் பகுதியில் நடைபெறும் இந்தப் போராட்டத்தில் பாதிக்கும் மேற்பட்ட வைத்தியசாலைகள் இயங்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. மின்சார வசதியின்மையால் வைத்திய உபகரணங்கள் எவற்றையும் உபயோகித்து காயம் பட்ட மக்களுக்கான மருத்துவவசதிகளை வழங்க முடியவில்லை.
வைத்தியசாலையும் அதனை அண்டிய பகுதிகளும் அமைதி வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருந்தாலும் அங்கும் குண்டுகள் விழுந்த வண்ணம் தான் இருக்கின்றன. தமிழீழத்திலும் இதே நிகழ்வுகள் நடந்திருக்கின்றன, யாழ் வைத்தியசாலையில் இராணுவத்தினரின் கொடூரத் தாண்டவம், புதுமாத்தளன் வைத்தியசாலை மீதான தாக்குதல், அமைதிவலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்ட பகுதிகளின் மீதான விமான மற்றும் எறிகணைத் தாக்குதல் என்ற நிகழ்வுகளிலும் கூட ஒற்றுமை இருக்கின்றது.
பாலஸ்தீனத்தில் நெடிதுயர்ந்த கட்டடங்கள் ஒரு நிமிடத்தில் தரைமட்டமாக்கப்ப்பட்டு விடுகின்றன. இடிந்த கட்டடங்களுக்குள் இருந்து அவயவங்களை இழந்த குழந்தைகள் மீட்கப்படும் காட்சிகள் மனதை உலுக்குகின்றன. உயிருக்கான மதிப்பு எல்லோருக்கும் ஒன்றுதான்.. உறவுகளை இழக்கும் வேதனை எல்லோருக்கும் பொதுவானதே. உறவுகளை இழக்கும் போது வரும் வலி, சாதி, மதம் ஏற்றத்தாழ்வு என்று எந்தப் பேதமும் பார்ப்பதில்லை. விதிகளைப் பேணாத ஒரு அமைப்பு செய்த கொலைகளுக்குப் பழி வாங்கும் வகையில் ஒன்றும் அறியாத அப்பாவிகள் கொன்று குவிக்கப்படுவதை வாய் மூடி மௌனியாக இந்த உலக நாடுகள் பார்த்துக் கொண்டுதான் இருக்கப்போகின்றனவா?
இந்த நூற்றாண்டில் வைத்திய வசதியை இன்றிக் காயங்களுடன் கண் முன்னால் மரணத்தை வரவேற்கும் நிலையில் சகமனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். போர் நிறுத்தம் வேண்டும் என்று சில நாடுகள் குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் போர் நிறுத்தமானது ஹமாசுக்கு ஆதரவாக அமைந்து அவர்களை இந்த இக்கட்டான நிலையில் இருந்து மீட்டு விடும். மீண்டும் அவர்கள் தம்மைப் பலப்படுத்திக் கொண்டு விடுவார்கள் என்றே இன்னொரு புறம் போர் நிறுத்தக் கோரிக்கையை அமெரிக்கா மறுதலித்துக் கொண்டிருக்கின்றது. ஒவ்வொரு நாடுகளும் தம் நலன்களை மட்டுமே முன்னிறுத்திப்பேசிக்கொண்டிருக்கின்றனவே தவிர பாதிக்கப்பட்ட இருபுற மக்களுக்காகவும் குரல் கொடுக்க யாரும் முன்வரவில்லை. இரு நாடுகளில் தொடங்கிய சண்டை, உலக நாடுகளை இரு அணிகளாகப் பிரியவைத்து மீண்டும் ஒரு உலகப் போருக்கான பிள்ளையார் சுழியைப் போட்டுவிடக் கூடிய ஒரு அபாயமும் இருக்கின்றது. யார் பக்கம் நியாயமுள்ளது என்பதைத் தீர்மானிக்க முடியாதளவுக்கு சிக்கல்கள் நிறைந்த இந்தப் போரில் உடனடியாகத் தீர்வு எட்டப்பட்டு விடும் என்று சொல்ல முடியாது. ஆனால் இந்தப் போர் உடனடியாக நிறுத்தப்பட்டு உயிர்ப்பயம் இன்றி நிம்மதிப்பெருமூச்சு விடக் கூடிய நிலை ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதே இப்போதைய உடனடித் தேவை
இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்ததா?
உங்கள் விருப்பத்தைத் தெரிவியுங்கள், நண்பர்களுடன் பகிருங்கள்.
