பொன்னியின் செல்வன் பகுதி 2

சியாமளா யோகேஸ்வரன் 11 மே 2023 5 நிமிட வாசிப்பு

எதிரொலிப்பத்திரிகையில் வெளிவந்த பொன்னியின் செல்வன் பகுதி இரண்டுக்கான விமர்சனம்.

பொன்னியின் செல்வன் பகுதி 2

பெரிதும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களின் காலத்தால் அழியாத காவியமான பொன்னியின் செல்வன் என்ற காலத்தால் அழியாத இலக்கியத்தின் இரண்டாம் பாகம் வெளிவந்து வெற்றிகரமாகவே ஓடிக் கொண்டிருக்கின்றது. கல்கி அவர்கள் தனது கற்பனைக்குதிரையைத் தட்டி விட்டு, கற்பனைப் பாத்திரங்களையும் கலந்து உருவாக்கிய சோழ வரலாற்றைக் கூறும் காப்பியமொன்றை ஐம்பது ஆண்டு காலமாக திரைப்படமாக எடுப்பதற்கு யாருக்கும் வராத துணிச்சல் மணிரத்னத்துக்கு வந்திருப்பதைப் பாராட்டியே ஆக வேண்டும். முதற்பாகத்தை விட இரண்டாவது பாகம் சிறப்பானதாக அமைந்திருப்பதில் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுக்கவில்லை என்றே கூற வேண்டும்.

முன்பெல்லாம் வாசகர்கள் என்று அடையாளப்படுத்தினாலே பொன்னியின் செல்வன் வாசித்திருக்கின்றீர்களா என்று ஒரு விதமான சவாலான எதிர்க்கேள்வி கேட்பார்கள். இத்தனை தடவைகள் வாசித்திருக்கின்றோம் என்று சொல்லும் போதுதான் எதிர்கேள்வி கேட்டவர் எம்மை வாசகர் என்று ஏற்றுக் கொள்ளும் நிலையும் காணப்பட்டிருக்கின்றது. வாசிக்கப் பொறுமை இல்லாதவர்களுக்கு அப்படி என்னதான் பொன்னியின் செல்வனில் இருக்கின்றது என்ற விடையறியாத சந்தேகம் இன்று வரைக்கும் ஆட்டிப்படைத்துக் கொண்டு தானிருக்கின்றது.

சோழர்களின் வரலாற்றையும், தமிழரின் சிறப்பையும் வெளிப்படுத்தும் ஒரு இலக்கியமாகவே, கல்கி அவர்களின் பொன்னியின் செல்வன் கருதப்பட்டது. அதை எக்காலத்திலும் அழியாத விதமாக, மாறி வரும் காலத்துக்கேற்ற வகையில் வருங்காலத்தினருக்கும் தெரிவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தற்கொலக்குச் சமானமான ஒரு முயற்சியை மணிரத்தினம் மேற்கொண்டு, கத்தி மேல் நடப்பது போன்ற ஒரு செயலை செய்திருக்கின்றார் என்ற ரீதியில் அவரை நிச்சயமாகப் பாராட்டியே ஆக வேண்டும். வெளியான ஒரு வாரத்துக்குள்ளாகவே பெரும் வசூலை அள்ளிக் குவித்திருக்கிறது ‘பொன்னியின் செல்வன்’ என்றால் அந்தப் பெயர் எம்மத்தியில் ஏற்படுத்தியிருக்கக் கூடிய மாயத்தைப் பற்றி விளக்க வேண்டிய தேவையில்லை.

எண்ணங்களை எழுத்தால் செதுக்கிய ஐந்து பாகங்களையும் இரண்டு பாகங்களாகத் திரையில் வடிப்பது என்பது அத்தனை இலகுவான காரியமில்லை. படத்தின் பிரமாண்டமும், ஆடையணிகளின் ஆடம்பரமும், காட்சியமைப்புகளும் திரைப்படத்துக்கும் கதைக்கும் அணி சேர்க்கின்றன என்பதையும் ஒத்துக் கொண்டேதான் ஆக வேண்டும். மணிரத்தினம் என்றாலே பிரமாண்டம் என்ற உண்மையைப் போர்க்காட்சிகளிலும் அரண்மனைக் காட்சிகளிலும் தோட்டா தரணியின் வடிவமைப்புடன் அழுத்தமாகவே பதிவு செய்துள்ளார்.

இலங்கையிலிருக்கும் பொன்னியின் செல்வரை ஆதித்தகரிகாலரின் கட்டளைக்கேற்ப அழைத்து வர பல்லபேந்திரனும், கைது செய்து அழைத்து வரக் கட்டளைத்தளபதியும் சதியால் கொல்லவென பாண்டிய ஆபத்துதவிகள் முயற்சி செய்வதாகவும், தாயகம் திரும்பும் போது நடுக்கடலில் புயற்காற்றில் வந்தியத் தேவனும் அருண்மொழித்தேவரும் அகப்பட்டுக் கொண்ட நிலையில் அவர்களின் கதி என்ன என்ற கேள்வியுடன் திரைப்படத்தின் முதற்பாகம் முடிவடைந்திருந்தது.

பொன்னியின் செல்வன் என்பது உண்மையில் அருண்மொழித்தேவரைக் (ஜெயம் ரவி) குறிப்பதானாலும் கல்கியின் புனைவின் படி கதை முழுவதும் ஊடாடியபடி உயிர்ப்புடன் வைத்திருப்பவர் வந்தியத்தேவன் (கார்த்திக்) ஆவார். நாவலின் பெயருக்கேற்ப அருண்மொழித் தேவருக்கோ அல்லது வந்தியத்தேவருக்கோ அல்லாமல் திரைப்படத்தில் கரிகாலச்சோழருக்கே (விக்ரம்) அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது போன்ற உணர்வு ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது உள்ளது. அவரும் கொடுத்த பாத்திரத்துக்கு தனது ஒப்பற்ற நடிப்பால் நிறைவு சேர்த்திருக்கின்றார். ஒரு இளவரசருக்கேற்ற தோரணையும், அரச நடையும், மூர்க்கமும், போர்க்குணமும் என இருந்தவர் இறுதியில் காதலில் அத்தனையும் கரைந்து போய் கசிந்து நிற்பது என அவரின் நடிப்பைக் குறிப்பிட்டுச் சொல்லாமல் இருக்க முடியாது. தமிழ் திரைப்படக் கதாநாயகர்களில் முன்னணியில் இருப்பவர் என்ற வகையில் விக்ரத்துக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்பது எதிர்பார்க்கப்பட்டதொன்றே. நாட்டைப் பங்கு போட விரும்பாமல் மதுராந்தகருக்கு அரசுரிமையை விட்டுக் கொடுக்க முன் வந்த காட்சியிலும், நந்தினியைச் சந்திக்கும் போது வெறும் நடைப்பிணமான தன்னைக் கொன்று விடு என்று உருக்கமாக வேண்டிக் கொள்ளும் காட்சியிலும், தம்பி அருண்மொழி உயிருடன் காணும் காட்சியிலும் விக்ரத்தின் நடிப்பைப் பாராட்டாமல் இருக்க முடியாது.

பொன்னியின் செல்வனின் கதையில் முக்கியத்துவம் பெற்ற சில முக்கிய கதாபாத்திரங்களான சேத்தன், பூங்குழலி போன்றோர் திடீரென வந்து திடீரென மறைந்து போகின்றார்கள். குந்தவையிடம் தந்தையாரான சுந்தரச்சோழருக்கும் ஊமைராணிக்கும் தனக்கும் ஒரு தொடர்பு இருப்பது போன்று ஒத்துக் கொள்ளும் காட்சியின் மூலம் மணிரத்னம் ஒரு குழப்பத்தை உருவாக்கியிருக்கின்றார் என்றே சொல்ல வேண்டும்.

கற்பனைப் பாத்திரம் என்று சொல்லப்படும் நந்தினிக் கதாபாத்திரத்துக்குப் பேரழகியான ஐஸ்வர்யா சரியாகவே பொருந்துகின்றார். அவரது அழகு உலகறிந்த ஒன்று என்றாலும், இந்தப் படத்தில் அவரது முகபாவங்களும், உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் ஒப்பற்ற நடிப்பும் பொன்னியின் செல்வன் கதையை நகர்த்திச் செல்பவர் என்ற வகையில் படத்தில் மட்டுமல்லாமல் எம்மனங்களிலும் கதாநாயகியாகவும் நிறைந்து விடுகின்றார். கரிகாலச்சோழனுக்கும் நந்தினிக்கும் இடையேயான இறுதிப் பேச்சுவார்த்தைக் காட்சி மணிரத்னத்தின் முத்திரையில் மிக அற்புதமாக படைக்கப்பட்டிருக்கின்றது. அவர்கள் சந்தித்த நிகழ்வும், வார்த்தைகள் தேவையின்றி ரசிக்கத் தக்க வகையில் அவர்களிடையேயான அன்பும் வெளிப்படுத்தப் பட்ட விதமும் படம் முடிந்த பின்னர் பொன்னியின் செல்வன் என்பது சோழகாவியம் என்ற உண்மையை மறந்து போக வைத்த காட்சிகளாகி விட்டன. நந்தினியைப் பற்றிச் சரியான கணிப்புக்கு வரும் முன்னரே மறைந்து போய் விட்டாலும் நினைவில் நின்று விடுகின்றார்,

குந்தவைக்கும் வந்தியத்தேவனுக்குமிடையேயான காதற்காட்சியில் மணிரத்னத்தின் கைவண்ணத்தையும். ரவிவர்மனின் ஒளிப்பதிவையும் குறிப்பிட்டுச் சொல்லாமல் இருக்க முடியவில்லை. குந்தவை படம் முழுக்க வந்தாலும் புலனத்தில் அவருக்கு இருந்த பாத்திரக் கனத்தை, திரைப்படத்தில் கொடுக்கவில்லை என்றே தோன்றியது. ஆனாலும் ஐஸ்வர்யாவின் முகத்தில் தெரியும் முதிர்ச்சியுடன் ஒப்பிடும் போது திரிஷா பாத்திரத்துடன் பொருந்தி பாந்தமான அழகுடன் பெரிதும் ரசிக்க வைத்திருந்தார். ஒரு ராஜ கம்பீரத்துடன், அரச களை ததும்ப தோன்றிய காட்சிகள் சிலவாயினும் அவற்றைச் சிறப்பாகவே செய்திருந்தார்.

அரசுக்களுக்கிடையேயான போர் என்றில்லாமல், ஒரு குடும்பத்தின் அரசுரிமைக்கான போராட்டம் என்ற பொனியின் செல்வன் கருவைத் தாண்டி, திரைப்பட மசாலாவாக காதலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கின்றது. முழுமையில்லாத கதையமைப்பும், அங்குமிங்கும் தாண்டுவதான காட்சிகளும், அளவுக்கதிகமான பாத்திரங்களும் இருப்பதைத் தவிர்க்க முடியவில்லை. ஆழ்வார்க்கடியானாக ஜெயராமின் நடிப்பு முதற்பாகத்தில் பேசப்பட்டதொன்று. இரண்டாவதில் அவரையும் பெரிதாகக் காணவில்லை.

வந்தியத் தேவனாகக் கார்த்தி அற்புதமாகவே தன் பாத்திரத்துக்கு சிறப்புச் சேர்த்திருக்கின்றார். ஆதித்த கரிகாலரிடமும் அருண் மொழித்தேவரிடமும் அவர் காட்டும் விசுவாசமான அன்பும், சண்டைக் காட்சிகளும் சிறப்பாகவே படமாக்கப்பட்டிருந்தன. அருண்மொழித்தேவராக ஜெயம் ரவி, யானையில் ஏறும் போது, அவர் வெளிப்படுத்திய கூர்ந்து நோக்கும் பார்வையுடனான நுட்பமாகச் சூழலை அவதானிக்கும் காட்சியும், இறுதியில் முடிக்கு உரிமையாளர் என்ற ரீதியில் தன் மகுடத்தை மதுராந்தகருக்கு விட்டுக் கொடுத்த காட்சியும் குறிப்பிட வேண்டிய காட்சிகளே. நடிப்பில் குறை வைக்காவிடினும் பொன்னியின் செல்வன் என்று எம் மனதில் போட்டு வைத்திருந்த ஒரு உருவ அமைப்புடன் அவர் சரியாகப் பொருந்தாதவில்லை போன்றதொரு உணர்வு.

ஏ. ஆர் ரகுமானின் இசை படம் முழுக்க முத்திரை பதித்திருக்கின்றது. “அக நக” என்ற பாடலும், சின்னஞ்சிறு என்ற பாடலும் மனதில் நிறைந்து நிற்கின்றன. கட்டுமானம், கலை, கட்டடக் கலை, போர்க்கலை என்ற சோழரின் வரலாற்றை அப்படியே பிரதிபலிக்கா விடினும் ஒரு வரலாற்றுத்திரைப்படமாக மக்களைச் சென்றடைந்த விதத்தில் இந்தத் திரைப்படம் வெற்றி பெற்றிருக்கின்றது.

ஐந்து பாகங்களில் அழகாக வடிக்கப்பட்ட தமிழுக்கான ஒரு இலக்கியத்தில் இன்றும் உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கும் கதாபாத்திரங்களுக்கு மூன்று மணி நேரத்தில் மீள உயிர் கொடுக்கப்பட்டிருக்கின்றதா இல்லையா என்பதை ரசிகர்கள் தான் தீர்மானிக்க வேண்டும். ஆனால் தொழில் நுட்பம் வளர்ந்து, வாசிப்பு அரிதாகிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், தமிழரின் வரலாற்றைப் பதிவு செய்யும் வகையில் காலத்தின் தேவையாக உருவாகியுள்ள இந்தத் திரைப்படம் நிச்சயமாக ஒரு வெற்றிடத்தை நிரவும் என்பது மறுக்க முடியாத ஒரு உண்மையே. ஒரு இயக்குனராகக் காட்சியமைக்க கூடிய சம்பவங்களை மட்டுமே தெரிவு செய்ததன் மூலம் உண்மைக்கதையை அப்படியே பிரதிபலிக்க முடியாமல் போகும் என்பது எதிர்பார்க்கப்பட்டதொன்றே.

அரசருக்கேயான கம்பீரமான அனல் பறக்கும் வீரவசனங்களைப் பேச்சுக்களை கேட்டுப் பழகி விட்ட எமக்கு ஜெயமோகனினது திரைக்கதை வசனங்கள் பெரிதாகப் பதியவில்லை. எத்தனை தடவைகள் கதையை வாசித்திருந்த போதும் மனதில் பதியாத சில உண்மைகள் திரைப்படத்தைப் பார்த்த பின்னர் அழுத்தமாக மனதில் பதிந்து விட்டிருக்கின்றன என்பதையும், பொன்னியின் செல்வன் கதையில் என்ன தான் இருக்கின்றது என்று தலையை உருட்டிக் கொண்டிருப்பவர்களுக்கு திருப்தியான ஒரு பதில் கிடைத்து விட்டிருக்கும் என்பதையும் மறுப்பதற்கில்லை

அச்சில் வெளியான பக்கத்தைப் பார்க்க
பொன்னியின் செல்வன் பகுதி 2 — எதிரொலி, வைகாசி 2023
எதிரொலி, வைகாசி 2023 இதழில் வெளியானது.

இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தெரிவியுங்கள், நண்பர்களுடன் பகிருங்கள்.

எழுதியவர்

சியாமளா யோகேஸ்வரன்

இலங்கை பேராதனைப் பல்கலைக்கழக விவசாய பீடப் பட்டதாரியான சியாமளா யோகேஸ்வரன், அவுஸ்திரேலியாவில் வசித்து வருகிறார். குயின்ஸ்லாந்து தமிழ்ச்சங்கம் மற்றும் குயின்ஸ்லாந்து தமிழ் மன்றம் நடாத்திய சிறுகதைப் போட்டிகளில் பல பரிசில்களை வென்றுள்ளார். நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள், இந்து சமயம் பற்றிய ஆய்வு நூல் என இதுவரை ஒன்பது நூல்களை எழுதியுள்ளார்.

மேலும் வாசிக்க

கட்டுரைகள்

கேள்விக்குறியாகும் சிறுவர் பாதுகாப்பு; தொடர்கதையாகும் பெண்மையின் துயரம்

வயது வேறுபாடு இன்றி பெண்களின் பாதுகாப்பு எங்கேயும் எப்போதும் கேள்விக்குறியாவது இன்னமும் அரங்கேறிக் கொண்டிருக்கும் ஒரு அவலம். அந்த வகையில் ஆஸ்திரேலியாவின் பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஒரு சிறுமியின் துயரக்கதை… (எதிரொலி பத்திரிகையில் வைகாசி மாதம் பிரசுரமானது) தொடர்கதையாகும்…

5 ஜூலை 2026
கட்டுரைகள்

சமூகவலைத்தளங்கள் எனும் சிலந்திவலையில்…

தொழினுட்பம் எமது வாழ்க்கையோடு பிரிக்க முடியாதபடி இணைந்து விட்டாலும் அவ்வப்போது சிலரது வாழ்க்கையைக் கீறித் தன் கூர்மையைப் பரிசோதித்துப் பார்த்து விட்டும் செல்கின்றது. தாய்வீடு இதழில் வெளி வந்த “சமூக வலைத்தளங்கள் எனும் சிலந்தி வலையில்” என்ற கட்டுரை.…

26 ஜனவரி 2026
கட்டுரைகள்

பந்தாடப்படும் பழங்குடியினர்

தை மாத எதிரொலி பத்திரிகையில் வெளிவந்த “பந்தாடப்படும் பழங்குடியினர்”- அவுஸ்ரேலிய நாள் என்று கொண்டாடப்படும் இன்றைய தினத்தை ஆக்கிரமிப்பாளர் தினமாகக் கருதும் பழங்குடியினரின் வேதனைகள். 60000 ஆண்டுகளுக்கு மேலான பழமை வாய்ந்த பண்பாட்டைக் கொண்டவர்களாய் அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து…

26 ஜனவரி 2026

எழுத்தாளரின் நூல்

நம்பிக்கை

நூலைப் பார்க்க

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *