கேள்விக்குறியாகும் சிறுவர் பாதுகாப்பு; தொடர்கதையாகும் பெண்மையின் துயரம்

சியாமளா யோகேஸ்வரன் 5 ஜூலை 2026 5 நிமிட வாசிப்பு

வயது வேறுபாடு இன்றி பெண்களின் பாதுகாப்பு எங்கேயும் எப்போதும் கேள்விக்குறியாவது இன்னமும் அரங்கேறிக் கொண்டிருக்கும் ஒரு அவலம். அந்த வகையில் ஆஸ்திரேலியாவின் பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஒரு சிறுமியின் துயரக்கதை… (எதிரொலி பத்திரிகையில் வைகாசி மாதம் பிரசுரமானது)

தொடர்கதையாகும் பெண்களின் துயரம்

ஆஸ்திரேலியாவின் பூர்வீகக் குடி மக்களின் வாழ்க்கை முறை, இயற்கை, குடும்பம் மற்றும் பாரம்பரியத்துடன் நெருங்கிப் பின்னிப் பிணைந்ததாகக் காணப்படுவதுடன், அவர்கள் சமூகமாக வாழும் முறையும் தனித்துவமானதாகவே காணப்படுகின்றது. பூர்விகக்குடி மக்கள் பெரும்பாலும் கூட்டுக்குடும்பங்களாக “community” அல்லது “town camps” எனப்படும் குழுவாகச் சேர்ந்து வாழும் குடியிருப்புகளிலேயே வாழ்ந்து வருகின்றனர். ஒரே வீட்டில் பலர் சேர்ந்து வாழ்வது சாதாரணமாக இருப்பதும், குழந்தைகளைக் கவனித்துக் கொள்வதைச் சமூகத்தின் பொறுப்பாகவே கருதிக் குழந்தைகளை வளர்ப்பதில் எல்லோருமே உரிமையுடன் பங்கெடுத்துக் கொள்வதும் பொதுவான அம்சங்களாக இருக்கின்றன.

இந்தப் பின்னணியைக் கொண்ட ஐந்து வயதான ஆஸ்திரேலிய பூர்வீக (Aboriginal) சிறுமி ஒருத்தி வடக்கு பிரதேசத்தில் உள்ள அலைஸ் ஸ்பிரிங்ஸ் (Alice Spring) நகர முகாம் ஒன்றிலிருந்து கடத்தப்பட்டுள்ளதாகத் தேடப்பட்டு வந்த நிலையில், அவளின் உடலானது ஐந்து நாட்களின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டமை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றது. இச்சிறுமியின் மரணமானது, பூர்வகுடிச் சிறுவர்களின் பாதுகாப்புத் தொடர்பாக அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகள் பற்றிய பல கேள்விகளையும் எழுப்பியிருக்கின்றது.

சிறுமியின் மரணத்தின் பின்னரான துக்ககாலத்தில் பயன்படுத்துவதற்காக, குமாஞ்சாயி என்ற மாற்றுப்பெயரை அவளுடைய குடும்பத்தினர் அச்சிறுமிக்கு வழங்கியிருக்கின்றனர். இது ஆஸ்திரேலியாவின் பூர்வீக வார்ல்பிரி மக்களிடையே காணப்படும் ஒரு பண்பாட்டு நடைமுறையாகும். இறந்து போன அன்புக்குரியவரின் பெயரைப் பயன்படுத்துவது, அவர்களின் ஆன்மாவை பாதிக்கக்கூடும் என்று அவர்கள் நம்புகின்றனர்.

குமாஞ்சாயி என்று அழைக்கப்படும் சிறுமி மத்திய ஆஸ்திரேலியாவில் அறியப்பட்ட பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவள். அவளது கூட்டுக்குடும்பத்தில் ராபின் கிரானைட்ஸ் ஜபாங்கங்கா உள்ளிட்ட சமகால பூர்வீக ஆஸ்திரேலிய கலைஞர்கள், மேலும் அரசியல்வாதிகள் பெஸ் பிரைஸ் மற்றும் ஜசிந்தா நம்பிஜின்பா பிரைஸ் ஆகியோரும் அடங்குவர்.

அடிக்கடி இடம் மாறி வாழ்ந்த குமாஞ்சாயின் குடும்பம், இறுதியில் அலைஸ் ஸ்பிரிங்ஸின் தெற்கு புறநகரில் உள்ள “இலிபெரென்யே ஓல்ட் டைமர்ஸ்” எனப்படும் வீடமைப்பு நிலைமை மோசமாயிருந்த ஒரு முகாமிலேயே வாழ்ந்து வந்திருக்கின்றது. சிறுமியின் தந்தையார் சிறையில் இருக்கும் நிலையில், தாயாராலும் கூட்டுக் குடும்பத்தினராலுமே குமாஞ்சாயி வளர்க்கப்பட்டு வந்திருக்கின்றார்.

உறவினர்களின் கூற்றின்படி குமாஞ்சாயி பேச முடியாதவர் என்றும், பெரும்பாலும் கையசைவுகள் மூலமாகவே தொடர்பு கொள்வார் என்றும் கூறப்படுகின்றது. நள்ளிரவிற்குச் சற்று முன்னதாகக் குடியிருப்பு முகாமில் தூங்க வைக்கப்பட்ட குமாஞ்சாயி காணாமல் போய் விட்டதாக 2026 ஏப்ரல் 26 அன்று அதிகாலை 1:30 மணியளவில் புகார் அளிக்கப்பட்டிருக்கின்றது. ஏப்ரல் 25 இரவு 11 மணியளவில் அதே குடியிருப்பில் தங்கியிருந்த சிறுமியின் தூரத்து உறவினரும், அண்மையில் சிறையிலிருந்து விடுதலையாகியிருந்தவருமான ஜெஃபர்சன் லூயிஸின் கைகளைப் பிடித்தபடி குமாஞ்சாயியைக் கண்டதாக நேரில் கண்ட சாட்சிகள் தெரிவித்திருக்கின்றார்கள்.

ஆரம்பத்தில் இக்கடத்தலானது காணாமல் போன வழக்காகவே கருதப்பட்டு, 300 தன்னார்வலர்களை உள்ளடக்கிய விரிவான தேடுதல் நடவடிக்கையாக முடுக்கி விடப்பட்டிருந்தது. இதேவேளை, சிறுமியுடன் கடைசியாக காணப்பட்ட லூயிஸை கண்டும்பிடிக்கக் காவல்துறையும் தனது தேடுதல் வேட்டையைத் தொடங்கியிருந்தது. சுமார் 5 சதுர கிலோமீட்டர் பகுதி கால்நடையாகவும், 80 சதுர கிலோமீட்டர் பகுதியானது வாகனங்களினதும் விமானங்களினதும் உதவி கொண்டும் தேடப்பட்டது.

கடத்தப்பட்ட குமாஞ்சாயியைக் காட்டுப்பகுதியில் கைவிட்டுச் சென்றிருக்கலாம் என்று காவல்துறை ஆரம்பத்தில் சந்தேகித்தது. பின்னர் ரொட் (Todd) ஆற்றின் வரண்ட பகுதியில் லூயிஸின் சட்டை, ஒரு குழந்தையின் உள்ளாடை மற்றும் ஒரு போர்வை ஆகியவற்றைக் காவல்துறை ஏப்ரல் 26 அன்று கண்டு பிடித்தது. அந்த இடமானது குற்றபிரதேசமாக அறிவிக்கப்பட்டதுடன், லூயிஸைக் கைது செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மரபணுப் பரிசோதனையில், அந்த உள்ளாடையில் குமாஞ்சாயி மற்றும் லூயிஸ் இருவரின் DNA சுவடுகள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. 2026 ஏப்ரல் 30 அன்று, தேடுதல் குழுவினரால் குமாஞ்சாயியின் உடல் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறை அறிவித்தது.

சிறுமி கொலை செய்யப்பட்ட விபரம் வெளி வந்த பின்னர், மற்றொரு நகர முகாமில் தங்கியிருந்த லூயிஸ் உள்ளூர் மக்களால் கடுமையாகத் தாக்கப்பட்டு மயக்க நிலைக்கு தள்ளப்பட்டிருந்த நிலையில் காவல்துறை மற்றும் அவசர மருத்துவப் பணியாளர்களால் மீட்கப்பட்டிருந்தார்.

இதைத் தொடர்ந்து அலைஸ் ஸ்பிரிங்ஸ் அருகே கூடிய சுமார் 400 பூர்வீக மக்கள் பூர்வீக மரபுச் சட்டத்தின் கீழ் லூயிஸுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் நடாத்தி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள். மருத்துவமனைக்கு வெளியே கூடியிருந்த சிலர் கையில் அகப்பட்ட பொருட்களை எறிந்து போராட்டம் நடாத்தியதும், காவல்துறை கண்ணீர்ப்புகை பயன்படுத்தி அடக்கியதும் வீடியோக்காட்சிகளில் பதிவாகியிருக்கின்றது.

போராட்டக்காரர்கள் காவல்துறை வாகனங்களை தாக்கியதுடன், ஒரு வாகனம் தீ வைத்து எரிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வன்முறையால் சுமார் 200,000 டொலர்கள் வரையில் இழப்பேற்பட்டிருப்பதாகக் கூறப்படுகின்றது. இச்சிறுமியின் மரணத்தால் தூண்டப்பட்ட வன்முறை கலவரங்களில் இதுவரையில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ABC செய்தி நிறுவனம் தெரிவித்த செய்திகளின் படி, மருத்துவமனைக்கு வெளியே கூடியிருந்த சிலர், லூயிஸ் PAYBACK (பழிவாங்கும் தண்டனை) எதிர்கொள்ள வேண்டும் என்று குரல் எழுப்பியதுடன், அவரை காவல்துறை பாதுகாத்து வருகிறது என்றும் குற்றம்சாட்டினர்.

“PAYBACK” என்பது மத்திய ஆஸ்திரேலியாவில் உள்ள பூர்விகக்குடிகளின் மரபுச் சட்டத்தின் கீழ் வழங்கப்படும் பாரம்பரிய தண்டனையைக் குறிக்கும் சொல் ஆகும். இது பூர்வீகக் குடும்பங்கள் மற்றும் குழுக்களுக்கிடையில் ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்கத்துடன் மூத்தவர்களால் அமுல்படுத்தப்படக்கூடிய நடைமுறைகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றது.

ஞாயிற்றுக்கிழமை காலை லூயிஸுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை அறிவித்த வடக்கு பிரதேச காவல்துறை ஆணையர் மார்டின் டோல் இந்தக் கலவரங்களை அருவருப்பானது என்றும் கண்டனத்துக்குரியது என்றும் விவரித்திருந்தார்.

லூயிஸ் தன் காயங்களுக்குச் சிகிச்சை பெற்று கொண்டிருந்த அலைஸ் ஸ்பிரிங்ஸ் மருத்துவமனைக்கு வெளியே ஏற்பட்ட வன்முறைக் கலவரங்களின் காரணமாக, காவல்துறை அவரை 1,500 கிமீ வடக்கில் உள்ள டார்வின் நகரத்துக்கு மாற்றியது.

லூயிஸுக்கு எதிராகப் பல குற்றப் பதிவுகள் காணப்படுகின்றன. கடந்த பத்து ஆண்டுகளில் கடுமையான தாக்குதல் மற்றும் குடும்ப வன்முறை தொடர்பான குற்றங்களுக்காக பலமுறை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் எனினும், குழந்தைகள் மீதான குற்றங்கள் எதுவும் பதிவாகியிருக்கவில்லை. 2024 அக்டோபரில் பிறரைத் தாக்குதல், குடும்ப வன்முறை குற்றங்கள் மற்றும் ஜாமீன் நிபந்தனைகளை மீறுதல் ஆகியவற்றுக்காக 18 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, குமாஞ்சாயி கடத்தப்படுவதற்கு ஆறு நாட்களுக்கு முன்பே சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்தார்.

சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பிறகு, லூயிஸை லாஜாமானு பகுதியில் உள்ள குடும்பத்தினருடன் சேருமாறு அறிவுறுத்தப்பட்ட போதிலும், சமூக உறுப்பினர்களின் எதிர்ப்புக் காரணமாக அது நிறைவேறவில்லை என்றும் அதன் பின்னரே குமாஞ்சாயி தங்கியிருந்த முகாமில் வாழ்ந்த கூட்டுக் குடும்பத்தினருடன் வந்து தங்கியிருந்தார் என்றும் கூறப்படுகிறது. சம்பவத்திற்கு முன்பான நாட்களில் அவர் வழக்கத்திற்கு மாறாக அமைதியாக இருந்ததுடன் சற்று விசித்திரமாக நடந்து கொண்டதாகவும், அதிகமாக மதுபானம் அருந்தியிருந்ததாகவும் முகாமில் வசிப்பவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

47 வயதான ஜெஃபர்சன் லூயிஸ் 2026 மே 5 அன்று டார்வின் உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜராகும் வரை காவலில் வைக்கப்பட்டார். அவரின் மீது கொலை குற்றச்சாட்டுடன், பாலியல் தாக்குதல் தொடர்பான இரண்டு குற்றச்சாட்டுகளும் மேலதிகமாகச் சுமத்தப்பட்டிருக்கின்றன.

வடக்குப் பிரதேசத்துக்கான குழந்தைகள் பாதுகாப்பு அமைச்சரான ராபின் காஹில், கொலையான சிறுமியின் குடும்ப நல அறிவிப்புகளைக் கையாண்ட விதம் குறித்த விசாரணைகள் நிறைவேறும் வரையில் குழந்தைகள் மற்றும் குடும்பங்கள் திணைக்களத்தைச் சார்ந்த மூவர் பணியிலிருந்து விலக்கப்பட்டிருப்பதாக அறிவித்தார். அதற்கு முன்தினம் வெளியான தகவல்களில், குமாஞ்சாயி பேபி உட்பட்ட ஆறு குழந்தைகளின் பாதுகாப்புக் குறித்த கவலைகள் எழுப்பப்பட்டிருந்தாகச் சொல்லப்பட்ட போதிலும், அது உறுதிப்படுத்தப்பட்டு விசாரிக்கப்பட்டதா என்பது குறித்த தெளிவான தகவல்கள் ஏதுமில்லை. “களவாடப்பட்ட தலைமுறைகள்” (Stolen generation) என்ற வரலாற்றின் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு, பூர்வகுடிக் குடும்பங்களில் இருந்து குழந்தைகளை அகற்றுவதில் பணியாளர்கள் தயக்கத்துடன் இருந்திருக்கலாம் என்ற கவலையையும் காஹில் தெரிவித்திருப்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கின்றது.

தொடர்ந்து அடக்குமுறைகளுக்குள்ளான சமூகமொன்றில் சட்டமும் வாழ்க்கையின் விதிமுறைகளும் சிதைந்து போயிருப்பதையும், குடும்ப வன்முறைகள், குற்றங்கள் போன்றன மலிந்து போயிருக்கின்றன என்பதையும் இந்நிகழ்வு உறுதிப்படுத்துகின்றது. பூர்வகுடிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த இன்னமும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதை இந்த அவல நிகழ்வு மேலும் அழுத்தமாக வலியுறுத்துகின்றது. எல்லாவற்றையும் தாண்டி தன்னைப் பாதுகாக்கவோ அல்லது தன் வேதனையையோ வெளிப்படுத்த முடியாத அவல நிலையில் மடிந்து போன ஒரு ஐந்து வயதுச் சிறுமியின் முகம் நினைவில் இருந்து நீங்க நீண்ட காலம் எடுக்கப் போகின்றது என்பதே தற்போதைய உண்மையாகும்

அச்சில் வெளியான பக்கத்தைப் பார்க்க
கேள்விக்குறியாகும் சிறுவர் பாதுகாப்பு; தொடர்கதையாகும் பெண்மையின் துயரம் — எதிரொலி, வைகாசி 2026
எதிரொலி, வைகாசி 2026 இதழில் வெளியானது.

இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தெரிவியுங்கள், நண்பர்களுடன் பகிருங்கள்.

எழுதியவர்

சியாமளா யோகேஸ்வரன்

இலங்கை பேராதனைப் பல்கலைக்கழக விவசாய பீடப் பட்டதாரியான சியாமளா யோகேஸ்வரன், அவுஸ்திரேலியாவில் வசித்து வருகிறார். குயின்ஸ்லாந்து தமிழ்ச்சங்கம் மற்றும் குயின்ஸ்லாந்து தமிழ் மன்றம் நடாத்திய சிறுகதைப் போட்டிகளில் பல பரிசில்களை வென்றுள்ளார். நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள், இந்து சமயம் பற்றிய ஆய்வு நூல் என இதுவரை ஒன்பது நூல்களை எழுதியுள்ளார்.

மேலும் வாசிக்க

கட்டுரைகள்

சமூகவலைத்தளங்கள் எனும் சிலந்திவலையில்…

தொழினுட்பம் எமது வாழ்க்கையோடு பிரிக்க முடியாதபடி இணைந்து விட்டாலும் அவ்வப்போது சிலரது வாழ்க்கையைக் கீறித் தன் கூர்மையைப் பரிசோதித்துப் பார்த்து விட்டும் செல்கின்றது. தாய்வீடு இதழில் வெளி வந்த “சமூக வலைத்தளங்கள் எனும் சிலந்தி வலையில்” என்ற கட்டுரை.…

26 ஜனவரி 2026
கட்டுரைகள்

பந்தாடப்படும் பழங்குடியினர்

தை மாத எதிரொலி பத்திரிகையில் வெளிவந்த “பந்தாடப்படும் பழங்குடியினர்”- அவுஸ்ரேலிய நாள் என்று கொண்டாடப்படும் இன்றைய தினத்தை ஆக்கிரமிப்பாளர் தினமாகக் கருதும் பழங்குடியினரின் வேதனைகள். 60000 ஆண்டுகளுக்கு மேலான பழமை வாய்ந்த பண்பாட்டைக் கொண்டவர்களாய் அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து…

26 ஜனவரி 2026
கட்டுரைகள்

சங்ககாலம் முதல் இன்று வரை தமிழர்களின் அறம் சார்ந்த வாழ்க்கை முறை

உழவர் திருநாளாம் தைப்பொங்கலைக் கொண்டாடும் மரபுத்திங்கள் மாதத்தில் சிட்னி பொங்கல் விழா மலரில் வெளிவந்த “சங்ககாலம் முதல் இன்று வரை தமிழர்களின் அறம் சார்ந்த வாழ்க்கை முறை” எனும் கட்டுரை. தமிழர்களின் பண்பாட்டுச் சிந்தனையில் அறம் என்பது வாழ்க்கையின்…

26 ஜனவரி 2026

எழுத்தாளரின் நூல்

நம்பிக்கை

நூலைப் பார்க்க

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *