நீதியின் வடிவங்கள்

சியாமளா யோகேஸ்வரன் 12 ஜூலை 2024 11 நிமிட வாசிப்பு

“வசந்தா, வசந்தா” தவத்தின் உரத்த குரல் பக்கத்து வீடு, அடுத்த வீடு என்று வீடுகள் தாண்டி அந்த வீதிக்கே கேட்கும் படியாய் இருந்தது. மதிய உணவை மற்றைய மூன்று பிள்ளைகளும் சாப்பிட்டு விட்டிருந்தார்கள். வசந்தன் மட்டும் இன்னமும் சாப்பிட வரவில்லை. அவனுடைய ரலி சைக்கிள் வீட்டு முற்றத்தில் நின்றது. அவன் வீட்டுக்குள்ளே தான் இருக்க வேண்டும் என்பதில் தவத்துக்குச் சந்தேகமில்லை. வழமையாக ஏதாவது குறும்புத்தனம் செய்து விட்டுத்தான் இப்படிச் சத்தமின்றிப் பதுங்கியிருப்பான். அண்ணன்மார் இருவரும் அவனுடன் வம்பு தும்புக்குப் போயிருக்க மாட்டார்கள். இவன் தான் ரேடியோவையோ சைக்கிளையோ கழற்றிப் பூட்டுவதாகச் சொல்லி ஏதாவது குழறுபடி செய்து வைத்திருப்பான். வீட்டில் இருக்கும் அத்தனை பேரினதும் சைக்கிளில் இருக்கும் ஹெட்லைட், டைனமோ என்று எல்லாவற்றையும் கழற்றி வைத்து ஆராய்ந்து கொண்டிருப்பான். அவை வேலை செய்யாமல் போகும் வேளைகளில்தான் சிக்கலில் மாட்டிக் கொள்வான். அக்கா மாலதியைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். அவளுக்கு இவன் செல்லம். என்ன திருகுதாளம்செய்தாலும், மறைத்து வைத்துக் காப்பாற்றி விடுவதும் அவள் தான். அப்பா கண்டிப்பு தான். ஆனால் அவர் இன்னமும் வீட்டுக்கு வரவில்லையே? எதைச் செய்து விட்டு எங்கு ஒளிந்து கொண்டிருக்கின்றான் தெரியவில்லை என்று மனம் பதட்டப்படும் போது கற்பனைகளும் கண்டபடி விரிய தவம் பதட்டமானாள்.

இவள் மாலதி வீட்டில் தானே நிற்க வேண்டும். இத்தனை கத்துகின்றேன். அவளுடைய காதிலும் விழவில்லையா? தவத்துக்கு இப்போது கோபம் வந்தது.

“மாலதி…. அடியே மாலதி” பதில் வராமல் போக இதயத்துடிப்பு இன்னமும் எகிறியது. கையில் கிடைத்த பூவரந்தடியை எடுத்துக் கொண்டாள். யாராவது கையில் மாட்டட்டும் என்று கறுவிக்கொண்டே கண்களை அங்குமிங்கும் சுழற்றியதில் மாலதியின் பூப்போட்ட சட்டையின் ஓரம் காருக்குப் பின்னால் தெரிந்தது. சத்தம் போடாமல் அடிவைத்து மறுபக்கமாய் போனவள் ஓட முற்பட்ட மாலதியின் காதுகளைப் பிடித்துக் கொண்டாள். வலியால் அலறியவளைக் கண்டு கொள்ளாமல்,

“எங்கேடி வசந்தன்?” உறுமலாகவே கேட்டாள்.

“தெரியேல்லை அம்மா, வலிக்குது. காதை விடுங்கோ” மாலதி பொய் சொல்வது குரலில் அப்படியே தெரிந்தது. எங்கிருந்தோ டீசலின் மணம் குப்பென்று மூக்குள் ஏறிக் கொண்டிருந்தது. தேடி அலைந்த கண்களுள் காரின் அடியில் இருந்த டீசல் கான் ஒன்று சிக்கிக் கொண்டது. சிந்தனையுடன் அதைக் கையில் எடுத்துக் கொண்ட படி,

“வசந்தன், வெளிய வா” தாயின் குரலில் இருந்த அச்சுறுத்தும் தொனியில் காருக்குள் மறைந்திருந்த வசந்தன் வெளியே வந்தான்.

“என்னடா இங்கே கூட்டுச்சதி நடக்குது?”

“அம்மா, இரண்டு அங்கிள்மார் பைக்கில டீசல் இல்லாமல் வெளியால நிற்கிறினம். கையில காசும் இல்லையாம். பார்க்கப் பாவமாய் இருந்தது, அதுதான்…” பதினெட்டு வயதாகிய இளந்தாரிப் பையன் போலன்றி அன்பால் உருகக்கூடிய பச்சிளம் பாகனாய் பேசும் மகனைத் திட்ட தவத்துக்கு மனம் வரவில்லை.பிளாஸ்டிக் குழாயொன்றைக் காரின் டீசல் தாங்கிக்குள் செலுத்தி வாயால் உறிஞ்சி டீசலை வெளியே எடுத்து, அதை வைத்து அரைவாசிக் கானை நிரப்பியிருக்கின்றான்.

“ஏண்டா, உனக்கு அப்பா பாவம் என்று தோணவில்லையா? அப்பாவும் காசு கொடுத்துத்தானே டீசல் அடிச்சவர்?” மகனின் இரக்க செயலில் நெகிழ்ந்தாலும் அப்படியே விட்டு விடக் கூடாது என்பதற்காக நியாயம் கேட்டாள்.

“அப்பாட்ட காசு இருக்குது, அதோட இப்ப உடனடித் தேவைக்குக் கொஞ்சமாய் தான் எடுத்தனான்” நியாயமும், நிலைமையும் புரிந்து பேசுபவன் ஞானம் போதித்த முருகனாகவே தெரிந்தான்.

“சரி குடுத்திட்டு வா.. இனிமேல் இப்படிச் செய்யக் கூடாது.” போனவன் பைக்காரர்களுடன் வந்தான்.

“தாங்ஸ் அன்ரி.. நல்ல பிள்ளயைப் பெத்திருக்கிறீங்கள். நாங்கள் பிறகு டீசலைக் கொண்டு வந்து தர்றோம்.” பைக்காரர்களின் வார்த்தையில் பெற்ற மனம் குளிர்ந்தது.

சாப்பாட்டை அவசரமாய் அள்ளி விழுங்கிக் கொண்டிருந்தவனைப் பார்த்தாள். இத்தனை நேரம் அவனுக்குப் பசி கூடத் தெரியவில்லை என்பதில் தவம் நெகிழ்ந்தே போனாள். அடுத்தவரை நேசிக்கும் குணம் எங்கிருந்துதான் வந்ததோ தெரியாது! கோயிலுக்குப் போனாலும் கச்சான் வாங்க எனக் கொடுக்கும் காசை கோயில் வாசலில் அமர்ந்து பிச்சை எடுப்பவர்களுக்குக் கொடுத்து விடுவான். பென்சிலின் அடிக்கட்டையை பேனை மூடியில் செருகி வைத்துப் பாவித்து இனி எழுதவே முடியாது என்ற நிலையில் உள்ள நண்பனுக்குத் தன் பென்சிலைக் கொடுத்து விடுவான். பென்சில் தொலைந்து விட்டது என்று வீட்டில் காரணம் சொல்வான். தருமம் என்று கேட்டு யாரும் வந்தால், இருக்கும் சில்லறைகளைக் கொடுத்து விடுவான். வங்கியில் வேலை செய்யும் தந்தை எல்லோருக்கும் உண்டியல் கொடுத்து, அதில் சேமிக்கப் பணமும் கொடுப்பார். வசந்தனின் உண்டியல் எப்போதும் வெறுமையாகவே இருக்கும். அதைப் பார்த்துப் பொறுக்காமல் தவம் அவ்வப்போது இருக்கும் சில்லறைகளைப் போட்டு வைத்தாலும், அதுவும் தங்காமல் மறைந்து விடும். அடுத்தவரின் நலனுக்காகச் சிந்திக்கும் சின்னப்பையனின் போக்கு அவளுக்கு விசித்திரமானதாக இருக்கும். அந்த அன்பு, வீட்டில் வளர்க்கும் ஆடு கோழிகளைப் பராமரிக்கும் விதத்திலும் புலப்படும். என் பிள்ளை எப்போதும் நல்லது மட்டுமே செய்வான் என்று அடிக்கடி தனக்குள் எண்ணிப் பெருமைப்பட்டுக் கொள்வாள்.

படிப்பில் சோடை போகவில்லை என்றாலும், எதையாவது கழற்றிப் பூட்டுவதில் வசந்தனுக்கு ஆர்வம் இருப்பதைக் கண்ட தந்தை இயந்திரவியலாவது படியேன் என்று சொல்லிக் கொண்டிருக்க, அவனை வெளியில் ‘நோட்டீஸ்’ கொடுக்கக் கண்டதாக மாலதி சொன்ன போது தவம் பதறியே போனாள்.

“தம்பி உந்த வேலையெல்லாம் பார்க்காதயணை, கெட்ட சகவாசம் உன்னை அழிச்சுப் போடும். உயிருக்கும் ஆபத்தாகிப் போடும்” அழுகையுடன் சொன்ன தாய்க்குப் பதில் சொல்லவில்லை. அடுத்த நாளே அவர்களை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்து விட்டான்.

“அன்ரி, வசந்தன் சொல்லுக் கேட்காட்டிச் சொல்லுங்கோ. நாங்கள் அவனைச் சேர்க்க மாட்டம்” அவர்களின் பணிவிலும், மரியாதையான பேச்சிலும் உருகிப் போன தவத்துக்கு மகன் கெட்ட வழியில் போகவில்லை என்பது தெளிவாகவே புரிந்தது.

“இல்லடா தம்பிமார், இனிச் சொல்ல மாட்டன், சாப்பிடுங்கோ” என்று உடனே செய்த பனங்காய்ப்பணியாரத்துடன் உபசரித்தாள். பெற்றதும் பெறாததுமாய் அவளது பிள்ளைகளின் எண்ணிக்கை அன்றுடன் அதிகரித்து விட்டிருந்தது. அவர்களின் நலனுக்காகவும் சேர்த்துப் பிரார்த்தித்தாள். எந்நேரமானாலும் வீட்டுக்கு வந்து விடுபவன், வீட்டுக்கு வராமலேயே விட்ட போது தாயின் உள்ளம் பரிதவித்தது. 83ம் ஆண்டுக் கலவரமும், தமிழர்களின் படுகொலையும் அவனுக்குள் தணியாத தணலை உருவாக்கியிருக்க வேண்டும். கொள்கைக்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்து விட்டான். ஒரு வருடம் உருண்டோடிய பொழுதில் ஒருநாள் வீட்டுக்கு வந்தவன், தாயுடன் அமர்ந்திருந்து ஆறுதலாகப் பேசிக் கொண்டிருந்தான்.

“தம்பி, உனக்கு ஒரு உயிரையும் கொல்ல மனம் வராதேடா. ஒரு பூச்சியைக் கூடக் கொல்லாமல் பிடிச்சுக் கொண்டு போய் மரத்திலை பத்திரமாய் விடுவாய். இப்ப எப்படியடா இன்னொரு உயிரைக் கொல்லலாம் என்று கிளம்பியிருக்கிறாய்?”

“அம்மா பூச்சி எங்களைக் கடிக்க வரேல்லை. இடம் மாறி வந்ததுக்கு வழி காட்டலாம், ஆனால் இடம் தேடிக் கடிக்க வாற பாம்புக்குப் பாவம் பார்க்கக் கூடாது. “

“எண்டாலும் தம்பி, உனக்கு ஒண்டு என்றால் நான் தாங்க மாட்டன்.”

“அம்மா நான் இன்றைக்கு பைக்கிலை போகேக்கை ஏதாவது நடந்தும் செத்துப் போகலாம் தானே?”

வசந்தன் சொல்லி முடிக்க முன்னர், அவனது வாயைப் பொத்திய தவம் விசும்பினாள்.

அவளது கைகளை விலக்கியவன், ”அம்மா, சாவு நிச்சயம், நான் பிறந்ததிலை எந்தப் பலனுமே இல்லாமல் செத்தால் தான் நீங்கள் கவலைப்படவேணும், என் சாவிலை ஏதோ ஒரு அர்த்தம் இருக்குது என்றால் நீங்கள் கவலைப்படக் கூடாது.” அழுத்தமாய் சொன்னதன் அர்த்தம் புரிந்து ஆற்ற முடியாமல் தவம் கொஞ்ச நேரம் அழுது கொண்டு தானிருந்தாள்.

புறச்சூழல் நன்றாகவே இருக்கவில்லை. தமிழரின் அவலங்கள் தொடர்ந்து கொண்டிருந்தன. சிறிய குழு ஒன்றால் நீண்ட நாட்களுக்கு இராணுவத்தை முகாமுக்குள் முடக்கி வைக்க முடியவில்லை. முகாமுக்குள் இருந்து முழங்கிய ஷெல்கள் தமிழரின் உயிரைக் குடித்தும், அவர்களின் வெறி அடங்கவில்லை. முற்றுகையை உடைத்து வந்து தமிழரின் இரத்தத்தைக் குடிப்பதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டு ‘ஒப்ரேசன் லிபரேசன்’ என்று பெயரிடப்பட்டது.

இராணுவம் பல முனைகளில் இறக்கி விடப்பட்டு வடமராட்சியின் அத்தனை பகுதிகளையும் குறி வைத்து முன்னேறிக் கொண்டிருந்தது. புரட்சி பிறந்த மண்ணை புரட்டிப் போட வேண்டும் என்பது அவர்களின் முதன்மை இலக்காக இருந்தது. கோயில்களிலும் பாடசாலைகளிலும் அடைக்கலம் பெறுமாறு கூறிய துண்டுப்பிரசுரங்கள் ஹெலிகொப்டரில் இருந்து வீசப்பட்டன. முடக்கி வைத்த மக்களை மும்முனைகளிலும் இருந்து குண்டு போட்டுக் கொலை செய்தார்கள் அல்லது அங்கவீனம் ஆக்கினார்கள். மருத்துவ வசதியின்றி மடிந்தோர் பலர். சிறிய குழுவைக் கொண்ட விடுதலை வேங்கைகளால் பெரும் படையணியை எதிர்த்து நிற்க முடியவில்லை. முடிந்தளவு சேதத்தை விளைவித்துக் கொண்டு பின்வாங்கினார்கள்.

முன்னேறிய இராணுவம், கண்ணில் பட்டவர்களை எல்லாம் சுட்டுக் கொன்றார்கள். சித்திரவதை செய்து எரித்தார்கள். வீட்டில் தங்கியிருந்தவர்களில் இளைஞர்களை அவர்களின் பெற்றோரின் முன்னால் சுட்டுத் தள்ளினார்கள். அம்மன் கோயில் ஒன்றில் அடைக்கலமாயிருந்தவர்களின் மேல் விழுந்த குண்டினால் பெருந்தொகையானோர் இறந்திருந்தார்கள். அம்மன் கோயில் வளவு பிணங்களால் நிறைந்திருந்தது. மற்றைய கோயில்களில் தஞ்சம் புகுந்திருந்தவர்களில் இளைஞர்களைக் கைது செய்து சித்திரவதைக் கூடமான பூசாவுக்குக் கொண்டு சென்றார்கள். தமிழனாய் பிறந்ததற்காக அவர்களின் வாழ்க்கை அரைகுறையாய் முடிய வேண்டும் என்று பிரமன் எழுதி வைத்திருக்க வேண்டும். அவர்களில் பலர் அதன்பின் திரும்பவேயில்லை.

அந்த நடவடிக்கை முடிந்த சில நாட்களுக்கு மனித உடல்கள் மட்டுமல்லாமல் குண்டு விழுந்து இறந்து போன ஆடு, மாடு நாய் போன்றவற்றின் பிணவாடையால் வடமராட்சி வலயம் நிறைந்திருந்தது.

கோயிலில் அடைக்கலம் புகுந்திருந்த போதும், தவத்தின் மனம் வசந்தனையும் அவனது தோழர்களையுமே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தது. அங்கங்கே நம்பிள்ளைகளும் மடிந்திருக்கின்றார்கள் என்பது தெரியுமே தவிர மேலதிக விபரம் தெரியவில்லை. சாப்பிட்டானா தூங்கினானா என்று தாயின் மனம் தவித்துக் கொண்டிருந்தது. வாழ்க்கையை அனுபவிக்க வேண்டிய இளம்வயதில் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு மரணபயத்துடன் வாழும் இளைஞர்களைப் பார்க்கையில் வீரம் செறிந்த தன் மகனைப் பற்றிய கவலை அர்த்தமற்றது என்றும் தோன்றியது.

அந்த நடவடிக்கையின் பின் நெல்லியடி மகா வித்தியாலத்தில் பெரிய இராணுவ முகாம் ஒன்றை அமைத்திருந்தார்கள். பதுங்கு குழிகளையும் பாதுகாப்பு அரண்களையும் வரிசையாக அமைத்து, அதிகளவிலான இராணுவத்தைக் கொண்ட பாதுகாப்பு மிக்க முகாம் என்று கேள்விப்பட்டிருந்தாள் தவம். அங்கிருந்து முன்னேறி வலிகாமப் பகுதியைக் கைப்பற்றுவதற்காகவே இம்முகாம் இடையில் அமைக்கப்பட்டுள்ளதாயும் அறிந்திருந்தாள். வயதுப்பிள்ளைகள் எல்லோரும் உயிர்ப்பயத்தால் ஊரை விட்டு இடம் பெயர்ந்து விட்டிருந்தனர். வீட்டில் இப்போது தவமும் கணவரும் மட்டுமே எஞ்சியிருந்தனர். வசந்தனால் முன்பைப் போல் மறைவாகவும் வீட்டுக்கு வர முடியவில்லை. தவத்துக்கு வசந்தனைப் பார்க்க வேண்டும் என்ற தவனமாகவே இருந்தது.

இப்போதெல்லாம் நேரத்துடனே ஆடுகளுக்குக் குழையைக் கட்டி விட்டு, கோழிகளையும் கூட்டுக்குள் அடைத்து விடுவாள். மண்ணெயில் ஊறிய பேப்பர் திரியில் எரியும் விளக்கைக் கண்டு வில்லங்கம் வந்து விடக் கூடாதென்று நேரத்துடனேயே சாப்பிட்டு விட்டு விளக்குகளை அணைத்து விடுவார்கள். தலைக்குள் ஓராயிரம் கவலைகள் அடைந்திருக்கும் போது தூக்கம் மட்டும் உடனே வந்து விடுமா? உள்ளே புழுக்கமாய் இருந்தாலும், வெளியே போய் காற்று வாங்க அச்சமாயிருந்தது. என்ன வாழ்க்கையடா என்று சிந்தித்துக் கொண்டிருக்கும் போதே வெளியே சரசரவென்று இலைகள் மிதிபடும் சத்தமும், வெளிக் கதவு ‘கிறீச்’ என்ற ஒலியுடன் திறக்கப்படும் சத்தமும் சன்னமாய்க் கேட்டது.

“குறுக்காலை போவாங்கள். இண்டைக்கு இந்த நேரம் வெளிக்கிட்டு எத்தினை பேரை அமுக்கப்போறாங்களோ தெரியேல்லை” வாய் விட்டுச் சொல்லப் பயத்தில் மனதுள்ளேதான் திட்டிக்கொண்டாள் தவம். இவள் மூச்சை விட அச்சப்படக் கணவன் பெருஞ்சத்தத்துடன் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்தான்.

“இஞ்சரப்பா… சத்தம் போடாதேங்கோ, கதவைத் தட்டப் போறாங்கள்” தவம் மெதுவாகக் கணவனை உலுப்பியபடி சொல்ல, குறட்டைச்சத்தம் நின்றது. கணவனும் விழித்து விட்டான் என்று புரிந்த நொடி, கதவில் மெதுவாக விறாண்டுவது போன்ற ஒலி கேட்டது. தவத்துக்கு அச்சத்தில் வியர்த்து விறுவிறுத்தது. கணவனின் கைகளை இறுகப் பிடித்த போது, அவன் கைகளும் குளிரால் சில்லிட்டுப் போயிருப்பதை உணர்ந்தாள்.

உயிர்ப்பயம் என்பது அதுதானா? சாகப் போகின்றோம் என்பது தெரிந்து விட்டால் உடலே இயங்க மறுக்கிறதே? உயிரைக் காப்பாற்ற என்ன செய்யலாம் என்று தானே சிந்தனை ஓடுகின்றது.

“அம்மா” கன்றின் குரல் கேட்ட பசு போல் தவம் பாய்ந்து எழுந்து கொண்டாள். கைகளைப் பிடித்திழுத்த கணவனின் கைகளை உதறி விட்டுப் பறந்து சென்று கதவைத் திறந்தாள்

வசந்தனும் அவனுடைய இன்னொரு நண்பனும் வெளியில் நின்றது பிறை வெளிச்சத்தில் தெரிந்தது. “தம்பிமார் உள்ள வாங்கோடா முதல்ல” தவம் வசந்தனைப் பிடித்த கையை விடவில்லை. முகத்தைப் பார்க்க முடியாத இருட்டு. ஆனாலும் விரல்களால் முகம் முழுவதும் தடவினாள். புதிதாக முளைத்திருந்த மீசை கைகளில் குத்தியது. இரண்டாவது தடவை வருடி மூன்றாவது முறையும் அடங்காமல் வருடியபோது அவன் கன்னங்களின் ஈரத்தை கைகள் உணர்ந்தன. அவள் கன்னங்களிலும் கண்ணீர் உருண்டோடியது. வாய் விட்டுக் கதைக்க முடியாத நிலையில் சத்தம் போட்டு அழவா முடியும்.

“தம்பி ரீ போடட்டே?”

“போடுங்கோ அம்மா” வசந்தனும் கிசுகிசுத்தான்.

“பைத்தியமா உனக்கு? வெளிச்சத்தைக் கண்டு உங்கன பதுங்கியிருக்கிற ‘அவன்’ வந்திட்டால் அவ்வளவுதான்” தந்தை எச்சரித்தார்.

“ஓமம்மா வேண்டாம், நான் வெளிக்கிடுறன்”

பிள்ளைக்கு ஒரு ரீ கூடப் போட்டு தரமுடியாத நிலை தவத்துக்குப் பெரும் வருத்தத்தைக் கொடுத்தது. வசந்தன் கிளம்பி விட்டான். அவன் சுகமாய் போய் சேர வேண்டும் என்ற வேண்டுதலுடன் அமர்ந்திருந்த தவத்தால் அதன்பின் தூங்க முடியவில்லை.

நினைத்த நேரம் ஊரடங்கு என்றார்கள். நினைத்த போது தமிழனின் இரத்தத்தால் பசியாறினார்கள். வெறியாட்டம் ஆடும் போதெல்லாம் இவர்களை அடக்க ஒரு காலம் வரும். ‘அவர்கள்’ வருவார்கள் என்றே மக்கள் காத்திருந்தார்கள்.

நெல்லியடி முகாமை அழிப்பது தான் தொடர இருக்கும் தொடர்கொலைகளையும் ஆக்கிரமிப்பையும் தடுக்க ஒரே வழி என்று தலைவரும் சிந்தித்திருந்தார். ஐம்பது என்ற எண்ணிக்கையில் அடங்கி ஒளித்து வாழும் குழுவால் பெரிய இராணுவத்தை என்ன செய்ய முடியும் என்றே எல்லோரும் நினைத்தார்கள். ஆனால் தமிழருக்காகப் போராடித் தாய் நிலத்தை மீட்க வேண்டும் என்ற தாகத்துடன் இருப்பவரின் கணக்கு வேறாக இருந்தது. ஒருவனால் பலரைக் கொல்ல வேண்டும் என்றால் அதற்கு அவன் தன்னைக் கொடையாகத் தரவேண்டும் என்ற ஒரு புது எண்ணம் தோன்றியதும் அந்தச் சிந்தனையின் பின்னணியில் தான். உயிரைக் காக்க எண்ணுவது தான் இயற்கையின் சித்தாந்தமே தவிர, வாழ வேண்டிய வயதில் அச்சமின்றிப் பகைவனைத் தேடிச் சென்று உயிரைக் கொடுப்பது என்பது சாதாரண மனிதனின் கற்பனைக்கும் அப்பாற்பட்டது. ஆனாலும் தமிழர் பிரதேசங்களில் நடந்த சம்பவங்கள், எதையாவது செய்தே ஆக வேண்டும் என்ற உந்துதலைக் கொடுத்திருந்தன.

மென்மையான மனம் கொண்ட வசந்தன், தானே அந்தப் பணியை முன்னெடுக்கப் போவதாய் ஒற்றைக் காலில் நின்றான். பகைவனின் முற்றத்தில் நின்றபடியே வெடி மருந்துகளைச் சரி பார்த்து வண்டியில் நிரப்பினான். பார்த்துக் கொண்டிருந்த நண்பன் பிரபுக்குத் தொண்டைக்குழியை அடைத்தது. சாவைக் கண்டு அஞ்சாதவர்கள்தான் அவர்கள். சாவினைத் தோள் மீது சுமப்பவர்களுக்கு இழப்புகள் புதியனவல்ல. ஆனாலும் தொடராய் பாதுகாப்பணி அமைத்துக் காவலைக் கெடுபிடியாக்கி வைத்திருக்கும் இராணுவத்தைத் தாண்டி செல்ல வேண்டும். அவர்கள் போட்டு வைத்திருக்கும் வீதித்தடைகளைத் தாண்டி வாகனம் செல்ல வேண்டும். அதற்குள் சுதாரித்துக் கொண்டு தாக்கும் எதிரியின் பின்னணித்தாக்குதலில் இருந்து தப்பிக்க வேண்டும். எதற்காக இந்த முயற்சி? அர்த்தமே இல்லாமல் நண்பனை இழக்க வேண்டி வருமோ என்ற கவலையில் பிரபுவின் முகம் சோர்ந்திருந்தது.

“என்னடா பிரபு. பியூஸ் போனவன் போல இருக்கிறாய்? முதுகிலை கால் அடிபட ஓடுறவனைப் பார்க்க வேணும் எண்டு உனக்கு ஆசையில்லையோ?” முகத்தில் முறுவலுடன் கேட்ட வசந்தனின் குரலில் வழமையான உற்சாகத்தில் ஒரு துளியும் குறைவிருக்கவில்லை.

“இஞ்சடா, நீ வாகனத்தை கிட்டக் கொண்டு போய் விட்டுட்டு குதிச்சு வந்திடு என்ன? நானும் அங்க உனக்காகக் காத்துக் கொண்டிருப்பன், சரியோ” பிரபுவின் குரலில் சுரத்து இருக்கவில்லை.

“சரிடா சரி… நீ யோசிக்காதை” சொன்ன வசந்தன் வெடி மருந்தேற்றிய வண்டியைச் சரி பார்த்தான்.

வழியில் இருக்கும் தடைகளை உடைக்கும் தாக்குதல்கள் தொடங்கி விட்டிருந்தன. வண்டியைக் கொண்டு சென்று தாக்கி நினைத்ததை நிறைவேற்றும் நிலை ஒன்று வரும் என்ற நம்பிக்கை பெரிதாக இருக்கவில்லை. ஆனால் வசந்தன் மட்டும் உத்தரவை எதிர்பார்த்து உறுதியாய் காத்திருந்தான். தடைகள் விலக்கப்பட்டு இவன் அழைக்கப்பட்டான். உறுதியான வேகத்துடன் வாகனம் சென்று கொண்டிருந்தது. தன்னைக் கொடையாக்கி விடுதலைக்கு வித்தாகும் வீரத்துடனும், சாவுக்கு அஞ்சாத தன்னம்பிக்கையுடனும் ஒருவன் அந்த வண்டியை ஓட்டி வருவான் என்று எதிராளி கனவிலும் நினைத்திருக்க மாட்டான். அப்படியும் எதிரியின் குண்டுகள் வசந்தனின் உடலைக் குறி பார்த்தன. ஆனாலும் அவன் பயணம் நிற்கவில்லை. வசந்தன் கொண்ட இலக்கு உயர்வானது, ஒரு இனத்தின் விடுதலைக்கும் பாதுகாப்புக்குமானது. தம்பி எப்பவும் நல்லதைத் தான் செய்வான் என்று நம்பும் ஒரு தாயின் வளர்ப்பைப் பிரதி நிதித்துவப்படுத்துவது. வெடிகளுடனான வண்டி வெடித்துச் சிதறியதில் நாற்பது வரையிலான எதிராளிகள் இறந்தனர். எஞ்சியவர்கள் தம் உயிர் காக்க வயல் வெளிகளில் இறங்கித் தப்பி ஓடினர்.

இடிமுழக்கம் போன்று அதிர்ந்த வெடியில் ஊரே விழித்துக் கொண்டது. தவத்தின் காதுகளிலும் அந்த ஓசை விழுந்தது.

“நெல்லியடிக்காம்பைப் பெடியள் அடிச்சிருக்கிறாங்கள் போல, அந்தப்பக்கம் தான் சத்தம் கேட்குது. எங்களைப் படுத்திற பாட்டுக்கு இவங்களுக்கு நல்லாக் குடுக்க வேணும்.” கணவனுக்குச் சொல்லி விட்டுப் புரண்டு படுத்தாள்.

தூக்கம் ஏனோ வர மறுத்தது. சரசரவென்ற சத்தம் வெளியில் கேட்க, வசந்தன் தானோ என்று உள்ளம் துடிக்க எழுந்து அமர்ந்து கொண்டாள். அம்மா என்று அவன் அழைக்கப் போகும் குரலுக்காக அவள் காதைத் தீட்டியபடி காத்திருந்தாள். அஞ்சுபவன் அம்மா என்று அழைக்கக் கூடும். காற்றில் கரைந்து விட்ட வசந்தனின் இறுதிக்குரல் “அம்மா” என்பதாய் இருந்திருக்குமா என்பதும் சந்தேகமே!

மறுநாள் நெல்லியடியே மயானமாகக் காட்சியளித்தது. மக்கள் அச்சத்துடன் ஊருக்குள் நடமாடினாலும், நல்ல பாடம் புகட்டியிருக்கின்றார்கள் என்று உள்ளுக்குள் மகிழ்ந்து கொண்டார்கள். மெல்ல மெல்ல நடந்த சம்பவம் ஊரெங்கும் பரவத் தொடங்கியது. கேட்டவர்கள் திகைத்து நின்றார்கள். இவர்களுக்குள் இத்தனை உறுதியை விதைத்தவன் யார் என்று மலைத்து நின்றார்கள். தவத்தின் காதுகளுக்கும் செய்தி வந்து கிடைத்தது. பெற்ற மனம் பித்து என்பதாய் அழுதாலும், மகனது சாவு மற்றவர்களைப் போன்ற அவச்சாவாய் இல்லாமல் அர்த்தம் நிறைந்தது என்று தன்னைத் தேற்றிக் கொண்டாள். ஊருக்குத் தெரிந்தால் ஒற்றர்கள் மூலம் பிரச்சனை வரலாம் என்று வீட்டவர்கள் உள்ளுக்குள் ஊமையாய் அழுது கொண்டார்கள்.

பக்கத்து வீட்டுச் சிறுமி சுஜி இவர்கள் வீட்டு மாமர ஊஞ்சலில் ஆடியபடி சமயப்புத்தகத்தை வைத்துப் படித்துக் கொண்டிருந்தாள். வசந்தனும் அப்படித்தான் படிப்பான். அவனது நினைவுகள் பொங்கி வந்தன. இறுதியில் அவன் முகத்தை ஒரு தடவை கூடப் பார்க்க முடியவில்லை. தவத்துக்கு துக்கத்தில் தொண்டை அடைத்தது.

“அன்பே சிவம்” அறுத்து வாசித்தாள் சுஜி. தவத்துக்கு வசந்தன் சொன்ன விளக்கம் ஞாபகத்துக்கு வந்தது. அன்பைக் கொட்டிய என் பிள்ளை இப்போது கொலைகாரனாகி விட்டானா? எத்தனையோ பெண்களை வன்முறை செய்த, பெற்றவரைக் கொன்று பிள்ளைகளை அநாதை ஆக்கிய, பிள்ளைகளைக் கொன்று பெற்றோரைப் பிரிவு அனலில் வாட விட்ட, வாழ வேண்டிய வயதில் கைம்பெண்ணாக்கி மூலையில் முடங்க வைத்தவனுக்குத் தண்டனை கொடுக்கும் நீதிபதியின் கைகளில் பாவத்தின் கறைகளாக படிந்திருக்கின்றன? தப்புச் செய்த குருவையும், உறவையும் கொல்லலாம் என்று போதித்தவன் பரமாத்மா ஆகி விடவில்லையா? தப்பைத் தட்டி யாரும் கேட்கலாம். கேட்காதவன் மனிதனே இல்லை. தவத்தின் மனம் தெளிந்தது. “என் பிள்ளை எதையும் நல்லதுக்குத்தான் செய்வான்” வாய் விட்டுச் சத்தமாகவே சொல்லி விட்டு நிமிர்ந்து நடந்தாள் தவம். காற்றில் கரைந்தவனின் நினைவுகளைக் காலம் பதிவு செய்து செய்து கொண்டது

அச்சில் வெளியான பக்கத்தைப் பார்க்க
நீதியின் வடிவங்கள் — எதிரொலி, ஆடி 2024
எதிரொலி, ஆடி 2024 இதழில் வெளியானது.

இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தெரிவியுங்கள், நண்பர்களுடன் பகிருங்கள்.

எழுதியவர்

சியாமளா யோகேஸ்வரன்

இலங்கை பேராதனைப் பல்கலைக்கழக விவசாய பீடப் பட்டதாரியான சியாமளா யோகேஸ்வரன், அவுஸ்திரேலியாவில் வசித்து வருகிறார். குயின்ஸ்லாந்து தமிழ்ச்சங்கம் மற்றும் குயின்ஸ்லாந்து தமிழ் மன்றம் நடாத்திய சிறுகதைப் போட்டிகளில் பல பரிசில்களை வென்றுள்ளார். நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள், இந்து சமயம் பற்றிய ஆய்வு நூல் என இதுவரை ஒன்பது நூல்களை எழுதியுள்ளார்.

மேலும் வாசிக்க

கட்டுரைகள்

கேள்விக்குறியாகும் சிறுவர் பாதுகாப்பு; தொடர்கதையாகும் பெண்மையின் துயரம்

வயது வேறுபாடு இன்றி பெண்களின் பாதுகாப்பு எங்கேயும் எப்போதும் கேள்விக்குறியாவது இன்னமும் அரங்கேறிக் கொண்டிருக்கும் ஒரு அவலம். அந்த வகையில் ஆஸ்திரேலியாவின் பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஒரு சிறுமியின் துயரக்கதை… (எதிரொலி பத்திரிகையில் வைகாசி மாதம் பிரசுரமானது) தொடர்கதையாகும்…

5 ஜூலை 2026
கட்டுரைகள்

சமூகவலைத்தளங்கள் எனும் சிலந்திவலையில்…

தொழினுட்பம் எமது வாழ்க்கையோடு பிரிக்க முடியாதபடி இணைந்து விட்டாலும் அவ்வப்போது சிலரது வாழ்க்கையைக் கீறித் தன் கூர்மையைப் பரிசோதித்துப் பார்த்து விட்டும் செல்கின்றது. தாய்வீடு இதழில் வெளி வந்த “சமூக வலைத்தளங்கள் எனும் சிலந்தி வலையில்” என்ற கட்டுரை.…

26 ஜனவரி 2026
கட்டுரைகள்

பந்தாடப்படும் பழங்குடியினர்

தை மாத எதிரொலி பத்திரிகையில் வெளிவந்த “பந்தாடப்படும் பழங்குடியினர்”- அவுஸ்ரேலிய நாள் என்று கொண்டாடப்படும் இன்றைய தினத்தை ஆக்கிரமிப்பாளர் தினமாகக் கருதும் பழங்குடியினரின் வேதனைகள். 60000 ஆண்டுகளுக்கு மேலான பழமை வாய்ந்த பண்பாட்டைக் கொண்டவர்களாய் அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து…

26 ஜனவரி 2026

எழுத்தாளரின் நூல்

நம்பிக்கை

நூலைப் பார்க்க

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *