தாய்வீடு இம்மாத இதழில் வெளியான மனதைத் தேடி என்ற எனது கட்டுரை. இல்லாத மனம் படுத்தும் பாடு, அது பெரும்பாடு.
மனதைத் தேடி……..
மனம் என்பது மாயைகள் காட்டும் கண்ணாடி என்று சொல்வதைக் கேட்டிருக்கின்றோம். இல்லாதவற்றை எல்லாம் இருப்பதைப் போன்று காட்டும் மாயைதான் மனமா அல்லது மனமெனப்படுவதே ஒரு மாயைதானா? அந்த மனம் எங்கேதான் இருக்கின்றது?
இதயப்பகுதியில்தான் மனம் இருப்பதாக எல்லோரும் நம்புவதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. கவலை ஏற்பட்டால் அல்லது துக்கம் உண்டானால் இதயப்பகுதி வலிப்பது போன்றோ அல்லது கல்லைக் கட்டி வைத்தது போன்று கனமாக இருப்பதாகவோ உணர்கின்றோம். கவலையாக இருக்கும் போது இதயத்தின் ஒரு பகுதியை யாரோ பிசைவது போன்ற வேதனையை உணர்வதால், மனதை இதயத்தின் இருப்பிடத்தோடு இணைத்துப் பார்க்கின்றோம்.
மனம் என்பதை அறிவியலும், ஆன்மிகமும் வெவ்வேறு விதமாகப் பார்க்கின்றன. அறிவியலானது மனம் என்பதை மூளையின் செயற்பாடுகளாகப் பார்க்கும் அதே வேளையில், ஆன்மிகமானது மனம் என்பதை ஆன்மாவின் கருவியாகவோ அல்லது உணர்வோட்டமாகவோ கருதுகின்றது.
மனதை அமைதிப்படுத்துவதன் மூலம் ஆழ்ந்த தியான நிலைக்குப் போகலாம் என்று ஆன்மிகம் கூறுகின்றது. அதாவது எண்ணங்களை உருவாக்குவதும் தீர்மானங்களை எடுப்பதும் மனம்தான் என்ற கருத்தை ஆன்மிகம் கொண்டிருப்பதால், மனதைக் கட்டுப்படுத்தினால் தியானம் கை கூடும் என்று சொல்கின்றது. மார்பின் மத்தியில் ‘’அனாகதம்’ என்ற சக்கரம் இருக்கின்றது என்றும் அது அன்பு, உணர்ச்சி மற்றும் கருணை உணர்வுகளை ஆள்கின்றது என்றும் கூறப்படுகின்றது. அதனால் அன்பென்ற உணர்வால் வலி ஏற்படும் போது போது அந்தப்பகுதியும் வலி கொள்கின்றது. எதுவானாலும் எம் வசதிக்கேற்ப “மனமிருந்தால் மார்க்கம் இருக்கும்” என்றும் “மனமென்பதே இல்லாதவன் செய்த கொடூரச் செயல்” என்றும் இல்லாத மனதைக் குறை கூறிச் சமாதானப்பட்டுக் கொள்கின்றோம்.
மனம் என்பது அறிவியலின் படி தனி ஒரு உறுப்பாக இல்லை. மூளையில் நடக்கும் நரம்பியற் செயற்பாடுகளின் கூட்டுச் செயலொன்றையே மனதின் முடிவு என்று நாம் எண்ணுகின்றோம். அப்படியாயின் மனதை யாரும் காயப்படுத்தினாலோ அல்லது பெருந்துக்கத்தின் போதோ இதயம் இருக்கும் பகுதி அல்லது நெஞ்சுக்கூட்டின் நடுப்பகுதி வலிப்பது ஏன்?
நம்முடைய உணர்வுகளான கவலை, பயம், மகிழ்ச்சி என்பன மூளையின் limbic system என்னும் பகுதியில் உருவாகின்றன. இதன்போது adrenaline மற்றும் cortisol என்ற ஹார்மோன்கள் வெளியிடப்பட்டு, இதயத் துடிப்பு வேகமாகிறது, மார்பு பகுதி இறுக்கமாகிறது. கவலைப்படும் போது மார்பு பகுதியில் உள்ள (intercostal muscles) மற்றும் மார்பு சுவர்த்தசைகள் சிறிது இறுகும் போது "வலி" அல்லது "கசப்பு" மாதிரியான உணர்ச்சிகள் ஏற்படுகின்றன. சில நேரங்களில், இது chest tightness அல்லது ‘கல் வைத்தது’ போன்ற உணர்வை ஏற்படுத்துகின்றது. இதனாலேயே கவலைப்படும் போது இதயம் கனமாக இருப்பது போன்றும் மார்பின் மத்தியில் ஒரு விதமான வேதனை உணர்வு ஏற்படுவது போன்றும் உணர்கின்றோம்.
இல்லாத அந்த மனதால் மனிதன் வருத்தப்படுவதற்கான காரணங்களைப் பட்டியல் இட்டால் அது முடிவில்லாமல் நீண்டு கொண்டே செல்லும். கவலைகளின் பரிமானங்களும் அது ஏற்படுத்தும் தாக்கங்களும் மனிதனுக்கு மனிதன் வேறுபடுகின்றன. எதையாவது நினைத்துக் கவலைப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்குச் சிறிய கவலை கூட மலையளவு பெரிதாகத் தோன்றும். கவலைப்படுவதால் மட்டும் எதுவும் மாறி விடப்போவதில்லை என்று புரிந்து கொண்டவர்கள், கவலைகளைப் புறந்தள்ளி விட்டு, எதிர்காலத்தை நோக்கிய அடுத்த அடியைத் தெளிவாக எடுத்து வைக்கின்றார்கள்.
கவலைகளை மனதில் வைத்துச் சுமந்து, வாழும் கணங்களைக் கெடுத்துக் கொள்ளக்கூடாது என்று எமக்குத் தெரிந்திருந்தாலும், அதனை நடைமுறைப்படுத்துவது இலகுவாக இருப்பதில்லை. ஏனெனில் மனம் என்று சொல்லப்படும் கற்பனை அமைப்பு உள்ளிருந்து கொல்லும் வியாதியாக, எமக்குத் தெரியாமலேயே எம்மை ஆட்டி வைப்பதைத் தடுக்க எம்மால் முடியவில்லை. எண்ணங்களை எம் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும் என்ற உயர் ஞானநிலை எல்லோருக்கும் கிடைத்து விடாததால், நினைவுகளையும், அது தரும் வலியையும் தன் இஷ்டப்படி புரட்டிப் போட்டு எம் நிம்மதிக்கு உலை வைக்கும் மனதை அடக்க முடியவில்லை என்பதுதான் நடைமுறை உண்மை.
எம் மனதை வாட்டுவன எவை? நெருங்கிய உறவொன்றின் இழப்பானது துக்கத்தை உண்டாக்குகின்றது. வாழ்க்கை நிரந்தரமற்றது என்பது தெரிந்தும், மரணம் வாழ்வின் நிச்சயமானது என்று தெரிந்தும் எம்மால் இறப்பை இலகுவில் ஏற்றுக் கொண்டு சமாதானமாக முடிவதில்லை. உற்றவர்களை இழந்த வேளையில், உறவினர்களும் நண்பர்களும் ஆறுதலைத் தந்தாலும், இழப்பின் துயரை ஆற்றும் மருந்து காலத்திடம் தான் இருக்கின்றது. நாள்கள் நகர்கையில் வேதனையின் வீரியம் குறைவடையும் என்றாலும், மனதுக்கு நெருங்கியவர்களின் மரணம் ஏற்படுத்தும் வேதனையை உடனடியாகத் தாங்கித் தான் ஆக வேண்டியிருக்கின்றது.
வாழ்வதற்கான ஆதாயங்கள் இன்றிப் போய் அடுத்து வரும் பொழுதை எப்படிச் சமாளிப்பது என்ற அச்சம் தருவதும் ஒரு விதமான மன வேதனையாகும். எம்மை நம்பி இருப்பவர்களுக்கு உணவையோ அல்லது அத்தியாவசியத் தேவைகளையோ பூர்த்தி செய்ய முடியாமற் போகும் போது, அதுவும் எம் கைகளைத் தாண்டிய காரணிகளால் அந்த நிலை ஏற்படும் போது மனம் உடைந்து போகின்றது. தனியொருவனுக்கு உணவில்லை எனில் ஜெகத்தினை அழித்திடுவோம் என்று சொன்ன பாரதியாரின் வாக்குக்கு ஏற்ப, ஒவ்வொருவரின் வாழ்க்கைப் பாதையையும் செப்பனிட்டுக் கட்டி எழுப்பும் சமூக அமைப்பொன்று இருக்க வேண்டும். அல்லது தம் திறமைகளை மேம்படுத்திக் கொண்டு, மாறி வரும் உலகத்துடன் போராடும் வல்லமையை மனிதன் பெற்றுக் கொள்ள வேண்டும்.
மனதுக்கு நெருக்கமானவர்களின் புறக்கணிப்போ, துரோகமோ எம் மனதைக் கிழித்து நாராக்கி விடுகின்றது. எந்தக் காயங்களுக்கும் மருந்திருக்கலாம். ஆனால் உண்மையான பாசம் வைத்திருக்கின்றார்கள் என்று நம்பிப் பழகியவர்கள் அந்த அன்பைப் பொய்யாக்கி எம்மைக் காலில் போட்டு மிதிக்கும் போது ஏற்படும் வலியைத் தாங்கிக் கொள்வது அத்தனை இலகுவாயிருப்பதில்லை. சில வேதனைகளை வாய் விட்டுச் சொன்னால், அதன் தாக்கம் குறைந்து விடும். சில வலிகளைப் புரிந்து கொள்ள யாருமில்லாத போது, அவற்றை மனதுக்குள் போட்டுப் புழுங்கத்தான் வேண்டியிருக்கின்றது. ‘பாத்திரமறிந்து பிச்சையிடு’ என்பார்கள். ஒருவரில் பாசம் வைக்க முன்னர், அவர் தகுதியானவரா என்று தெரிந்து கொண்டு அன்பு வைத்தால் ஏமாற்றமடைய வேண்டி வராது என்று இலகுவில் சொல்லி விடலாம். ஆனால் அந்த அன்புக் கணக்கை எப்படிப் போடுவது என்று யாரும் கற்றுத் தரவில்லை. அடுத்தவரின் அன்பை அறியக்கூடிய அளவு கோலை எவரும் வைத்திருப்பதாகவும் தெரியவில்லை. கணக்கு வைத்துப் பாசம் வைக்க அன்பு ஒன்றும் பொருளல்லவே? அன்பென்பது மனித மனங்களுக்கு ஆறுதல் தந்து, மனங்களின் காயங்களுக்கு ஒத்தடமிட்டு, மனிதத்தையும் காதலையும் உயிர்ப்புடன் வைத்திருக்கும் அற்புதமான உணர்வல்லவா?
தேவைக்குப் பயன்படுத்திக் கொள்பவர்கள், உறவுகளின் மகத்துவம் புரியாதவர்கள், மனித விழுமியங்களை அறியாதவர்கள் போன்றோரை எம் வாழ்வில் சந்தித்துத்தான் ஆக வேண்டும். சக மனிதர்களாலும் உறவுகளாலும் நேர்ந்த அவமானங்களும் வலிகளும் மனித வர்க்கத்தின் மீதிருக்கக் கூடிய நம்பிக்கையை உடைத்து விடுகின்றன. சமூகத்தில் பழக விருப்பமின்றி மனிதர்களில் இருந்து ஒதுங்கி வாழத் தூண்டுகின்றது. யாருடனும் நம்பிக்கை வைத்துப் பழகவோ அல்லது தெரியாதவருக்கு உதவி செய்யவோ ஒரு தயக்கத்தை உருவாக்கி விடுகின்றது. எதுவும் கடந்து போகும் என்றாலும் இதயம் சுக்குநூறாய் உடைந்து போயிருக்கும் கணங்களைத் தாங்குவது என்பது கடினமானதாகத்தான் இருக்கின்றது. மனமுடைந்து விட்டது என்று நாம் ஒதுங்கிக் கொண்டால் வாழ்க்கையும் எம்மை ஒதுக்கி விட்டுச் சென்று விடும். ஓடும் நதியோடு ஒடியபடி எம் காயங்களுக்கு நாமே மருந்திட்டுக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். சில சமயங்களில் அந்த மனமற்றவர்கள் ஏற்படுத்தி விட்ட நிரந்த வடுக்களுடன் வாழ்நாள் பூராவும் வாழ வேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்படத்தான் செய்கின்றது.
பிரச்சனைகளுக்கு உடனடித் தீர்வாக எதையாவது பொய்யைச் சொல்லி அந்த நிமிடப்பிரச்சனையைத் தீர்த்துக் கொள்ளலாம் என்று சிலர் நினைக்கின்றார்கள். அல்லது உண்மையை மறைப்பதன் மூலம் தற்காலிகமாகத் தப்பித்துக் கொள்ளலம் என்று நினைக்கின்றார்கள். அப்படியான எண்ணமானது அன்புக்கும் உறவுக்கும் என்றும் ஆதாயமாக இருக்கப்போகும் நம்பிக்கை என்ற அத்திவாரத்தைத் தகர்த்து விடுவதைப் பலர் புரிந்து கொள்வதில்லை. சிதைந்து போன நம்பிக்கைக்கும் நொருங்கி விட்ட மனதுக்கும் மன்னிப்பு என்பது ஒட்டுப் போடுகிறதே தவிர முன்னைய அன்பையும் புரிந்துணர்வையும் மீளக் கொண்டு வரப்போவதில்லை.
அன்பொன்றை நம்பி அடி வாங்கிய மனதை மீட்பது எங்ஙனம்? வானம் தலையில் விழுந்து விடவில்லை என்பதைப் புரிந்து கொண்டு, நிதானமாகப் பிரச்சனையை அணுகக் கற்றுக் கொள்ள வேண்டும். வேதனையில் வார்த்தைகளைச் சிதற விட்டுவிடாமல் பொறுமை காக்க வேண்டும். எம்மைக் காயப்படுத்தியவர்கள் தம் தவறுகளை ஒரு காலத்தில் உணர்ந்து கொள்ளலாம் அல்லது உணர்ந்து கொள்ளாமற் போகலாம். அது அவரவர்களின் மன நிலையைப் பொறுத்தது. விளைவுகளை எம்மிற் சிலர் நம்பும் கர்மாவின் கரங்களிலும், காலத்தின் பிடியிலும் கொடுத்து விடலாம். காலம் எந்த மனக்காயத்துக்கும் மருந்திடும் என்ற மாறாத உலக நியதி இருக்கின்றது. அந்த ஒற்றை நம்பிக்கையை மட்டும் உறுதியாகப் பற்றிக் கொண்டு வலியிலிருந்து மீண்டு வர முயற்சிக்க வேண்டியதுதான்.
தோல்வி தரும் துயரே மனங்களை வாட்டும் அடுத்த வேதனை ஆகும். முயற்சியும் கடின உழைப்பும் இருந்த போதும் எடுத்த செயலொன்று தோல்வியில் முடியும் போதோ அல்லது எதிர்பார்த்த வெற்றி ஒன்று கை நழுவிப் போகும் போதோ மனம் தளர்ந்து போகின்றோம். எம் மீதே அவநம்பிக்கை கொண்டு விடுகின்றோம். எமக்கு மட்டுந்தான் எல்லாத்துயரும் என்பது போலத் துவண்டு விடுகின்றோம். தோல்வி தரும் பாடமும், வீழ்ச்சி தந்த அவமானமும் தரக்கூடிய மனஉறுதி அடுத்த முயற்சிக்கான அத்திவாரத்தை ஆழமாகவே போட்டுத் தரும். அடுத்ததாகப் புது அத்தியாயம் ஒன்றிருக்கின்றது என்று நம்பும் அந்த மனதைத் தேடித் தக்க வைத்துக் கொள்ளும் பக்குவம் எம்மிடம் இருக்க வேண்டும்.
இறுதியாக மனம் என்ற ஒன்றிருந்தால் தானே அது உடைந்து நொருங்கி விட்டது என்று வருந்தி மூலையில் முடங்கிக் கொள்வதற்கு என்று சொல்வது எளிதாயிருந்தாலும், வாழ்க்கையின் வலி மிகுந்த தருணங்களைக் கடப்பது அத்தனை இலகுவாயிருப்பதில்லை. சவால்களும், சறுக்கல்களும், சோதனைகளும், சோகங்களும், இன்பங்களும், இனிய தருணங்களும் நிறைந்தது தான் வாழ்க்கை என்பதை மட்டும் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். மனம் பலவீனமாக இருந்தால் எதுவுமே பிரச்சனைதான். மனம் கலங்காமல் இருந்தால், பிரச்சனைகளைச் சவால்களாக மட்டும் நோக்கி அதை வெல்லும் வழி தேடி வாழ்ந்து விட முடியும். பிரச்சனைகள் புதுப்பாடமொன்றைக் கற்றுத் தருவதாகவே உறுதியான மனம் எடுத்துக் கொள்ளும். குரங்காகத் தாவும் மனதுக்கான தேடலைத் தொடர்ந்தபடி இந்தக் கட்டுரையை முடிக்கின்றேன்.
இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்ததா?
உங்கள் விருப்பத்தைத் தெரிவியுங்கள், நண்பர்களுடன் பகிருங்கள்.
