சங்ககாலம் முதல் இன்று வரை தமிழர்களின் அறம் சார்ந்த வாழ்க்கை முறை

சியாமளா யோகேஸ்வரன் 26 ஜனவரி 2026 4 நிமிட வாசிப்பு

உழவர் திருநாளாம் தைப்பொங்கலைக் கொண்டாடும் மரபுத்திங்கள் மாதத்தில் சிட்னி பொங்கல் விழா மலரில் வெளிவந்த “சங்ககாலம் முதல் இன்று வரை தமிழர்களின் அறம் சார்ந்த வாழ்க்கை முறை” எனும் கட்டுரை.

தமிழர்களின் பண்பாட்டுச் சிந்தனையில் அறம் என்பது வாழ்க்கையின் அடிப்படை நெறியாகக் கருதப்படுகிறது. மனிதன் இவ்வுலகத்தில் எங்ஙனம் வாழ வேண்டும்? சமூகத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்? பிற உயிர்களுடன் எத்தகைய உறவைப் பேண வேண்டும் என்பதனை வழி நடத்துகின்ற ஒழுக்கக் கோட்பாடே அறமெனக் கொள்ளலாம். தமிழர்களின் வாழ்க்கை அறத்தை தழுவியதாக இருந்தமையினால்தான் அவர்களுடைய பண்பாடானது காலத்தை வென்று வாழ்வதுடன், அந்த அறத்தைத் தழுவிய கருப்பொருளைக் கொண்ட இலக்கியங்கள் இன்றும் அழியாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

தனி மனிதனே குடும்பத்தினதும் சமூகத்தினதும் அடிப்படை அலகாக உள்ளான். உண்மையைப் பேசுதல், நேர்மையுடனும் ஒழுக்கத்துடனும் நடத்தல், பொறுமையையும், அன்பையும் வெளிப்படுத்தல் போன்றன ஒரு தனி மனிதனுக்கான அறமெனக் கொள்ளப்படுகின்றது. ஒவ்வொரு மனிதனும் அறவழியில் ஒழுகுவானேயாயின் குடும்பத்திலும், சமூகத்திலும் மகிழ்ச்சி நிலவுவதுடன் உலகத்திலும் அமைதியும் அறமும் நிலைத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

அறமானது தமிழர்களின் பண்பாடு என்ற பெயரில் வந்தவர்களை வரவேற்று உபசரித்தல், பெரியோரைக் கனம் பண்ணுதல், மூத்தோரைப் பராமரித்தல், ஒருவருக்கொருவர் உண்மையாக நடந்து உறவு என்ற கட்டமைப்பைப் பேணுதல் போன்ற வடிவங்களைப் பெறுகின்றது. குடும்பத்திலும், சமூகத்திலும் அக்கறை கொண்டவர்களாக வாழுதல், செய்யும் தொழிலில் அறத்தைப் பேணுதல், பேச்சும், செயலும் மற்றவர்களைக் காயப்படுத்தாமல், எல்லோரையும் மதிக்கும் விதமாக அமைதல், இயற்கையையும் பிற உயிர்களையும் பற்றிய அக்கறை கொள்ளுதல் என்பனவும் தமிழர் வாழ்வின் பொது அறமாகப் பேணப்பட்டிருக்கின்றது. திருவள்ளுவர் அறன் வலியுறுத்துதல் என்ற அதிகாரத்தில், “மனத்துக்கண் மாசிலனாதல் அனைத்தறன் ஆகுல நீர பிற” என்று அறம் பற்றிச் தெளிவாகச் சொல்லியிருக்கின்றார். அதாவது தன் மனதறிய மாசில்லாமல் நடப்பதே தலை சிறந்த அறம் எனும் போது, வாழ்வியல் தடம் மாறித் தவறாகப் போய் விட வாய்ப்பிருக்கப் போவதில்லை.

விருந்தோம்பல், தானம், பகிர்வு, பொறுமை, வீரத்துடன் கூடிய மனிதநேயம், குடும்ப அமைப்பு, குடும்ப உறுப்பினர்களின் பாசப்பிணைப்பு, நெறியான இல்லறம் போன்றன அன்றைய தமிழ் சமூகத்தின் அடையாளங்களாக இருந்ததுடன், சங்ககால இலக்கியங்கள் அன்று வாழ்ந்த மக்களின் உயரிய அறநெறிகளை வெளிப்படுத்தும் விதமாகவும் அமைந்திருந்தன. அரசர்கள் மக்களைப் பாதுகாப்பதையும், நீதி வழுவாது ஆட்சி செய்வதையும் தமது கடமையாகக் கருதினர். கோன் வழியில் குடிகளும் அறநெறியைப் பின்பற்றி வாழ்ந்தமையினால் அன்பும், அறனும், அமைதியும் நிலைத்திருந்தன. “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற புற நானூற்றுப்பாடலின் வரியானது உலகளாவிய சகோதரத்துவ உணர்வை வலியுறுத்தி, சங்ககால அறச் சிந்தனையின் உச்சத்தை வெளிப்படுத்துகிறது.

அறமானது குடும்பத்தில் எங்ஙனம் பேணப்பட வேண்டும் என்பதையும் சமூகத்தின் கடமைகளை எவ்வாறு ஆற்ற வேண்டும் என்பதையும் சங்க கால இலக்கியங்கள் பேசுகின்றன. சங்க கால இலக்கியங்களில் ஒன்றாகக் கொள்ளப்படும் புறநானூறு தானம், வீரத்துடன் கூடிய மனிதநேயம், அரசரின் அறம் முதலியன பற்றிப் பேசுகின்றது. பதிற்றுப்பத்து அரசரின் அற நெறி, மற்றும் குடிமக்களின் பாதுகாப்பு பற்றியும், நற்றிணை, குறுந்திணை போன்றன குடும்ப ஒழுக்கம் பற்றியும், பத்துப்பாட்டு நூல்கள் விருந்தோம்பலையும், சமூக கடமையையும் பேசும் விதமாக அமைந்திருக்கின்றன.

சங்ககாலத்திற்குப் பிறகு, தமிழர்களின் அற வாழ்க்கை திருக்குறளின் வழியாக மேலும் உறுதியான அடித்தளத்தைப் பெற்றது. திருவள்ளுவர் மனித வாழ்க்கையின் தொடக்கமாகவும் அடிப்படையாகவும் அறத்தை வைத்தார். தனிநபர் ஒழுக்கம், குடும்ப வாழ்க்கை, சமூக பொறுப்பு, அரசியல், நீதியுடன் கூடிய ஆட்சி ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைத்து அறத்தை அவர் விளக்கியுள்ளார். இதன் மூலம் அறம் தனிப்பட்ட வாழ்க்கைக்கு மட்டுமின்றி, சமூக மற்றும் அரசியல் வாழ்விலும் அவசியமானது என்பதை வலியுறுத்தினார்.

சங்ககாலத்திற்குப் பிந்தைய காலத்தில் காப்பியங்களின் ஊடாக வாழ்வியல் அறங்களைப் பேணும் கருத்துகள் ஊட்டப்பட்டன. சிலப்பதிகாரத்தில் கற்பு, நீதி, அரசரின் கடமை என்பனவும், மணிமேகலையில் கருணை, அகிம்சை மற்றும் சமூக அறம் என்பனவும் கருப்பொருளாகக் கொள்ளப்பட்டு அறம் பற்றி மக்கள் அறிவுறுத்தப்பட்டார்கள்.

அதற்கடுத்ததாக வந்த காலத்தில் கோயில்கள் தமிழ்ச்சமூகத்தில் முக்கிய பங்கு வகித்தன. தமிழையும் சமயத்தையும் வேறுபடுத்திப் பார்க்க முடியாத காலங்களாக இருந்த கி.பி ஏழாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரையிலான காலத்தில் பக்தி இலக்கியங்களின் ஊடாக அறமானது பேணப்பட்டது. இறை நேயத்தின் ஊடாக மனித மனங்கள் பண்படுத்தப்பட்டன. இக்காலகட்டத்தில் பணிவு, கருணை, நேர்மை, பிற உயிர்களிடத்தில் அன்பு, அன்னமிடுதல், இறைவனின் அன்பின் முன்னால் அனைவரும் சமம் போன்ற கொள்கைகள் மக்கள் அறத்துடன் வாழ்வதை உறுதிப்படுத்தின. கோயில்கள் வழிபாட்டுத் தலங்களாக மட்டுமல்லாது, கல்வி, அன்னதானம், மருத்துவ உதவி போன்ற சமூக சேவைகளின் மையங்களாகவும் செயற்பட்டதன் மூலம் சமூக வாழ்வின் ஒரு அங்கமாகவே அறம் வளர்ந்தது.

வந்தவர்களைப் பணிவண்புடன் வரவேற்று உபசரிக்க வேண்டும் என்பதை இளையான்குடி நாயன்மார் போன்றோரின் கதைகள் உணர்த்துகின்றன. பெற்றவர்களினதும் பெரியோர்களினதும் சொற்களை மதிக்க வேண்டும், அன்புக்கு முன் யாவரும் சமன், பிறர் மனை நயவாமை, உறவுகளின் மகத்துவம், சகோதர்களின் ஒற்றுமை, தர்மமே வெல்லும், கடமையைச் செய் போன்ற கருத்துகளை மகாபாரதமும், இராமாயணமும் புகட்டுகின்றன. இயற்கையையும் பிற உயிர்களையும் போற்ற வேண்டும் என்ற தமிழரின் உயர்ந்த பண்பாட்டுக்குச் சான்றாகத் தமிழர் திருநாட்களான தைப்பொங்கலும் மாட்டுப் பொங்கலும் விளங்குகின்றன.

பருந்துக்கு உணவாக வேண்டிய புறாவின் எடைக்கு நிகராகத் தன் தசையை அறுத்துக் கொடுத்ததாகச் சிபிச்சக்கரவர்த்தியின் கதை சொல்லப்படுகின்றது. தமிழர் வரலாற்றிலும் இலக்கிய மரபிலும் நீதியைக் காத்த மன்னன் எனப்போற்றப்படும் மனு நீதிச்சோழன் கன்றை இழந்த பசுவுக்காகத் தன் மகனைப் பலி கொடுத்த கதையானது நியாய அநியாயங்களுடன் சீர் தூக்கிப் பார்க்குமிடத்து முரண்பட்ட கருத்துகளைக் கொண்டிருப்பினும் நீதி வழுவா அரசாட்சியும், நீதிக்கு முன்னால் மனிதனும், மற்றைய உயிரினங்களும் ஒன்றெனக் கருதப்பட்டமையும் தான் கதையின் நீதியாகவும், மக்களுக்கான அறமாகவும் சொல்லப்பட்டிருப்பது புலனாகின்றது.

நவீன காலத்தில் தமிழர்களின் அறச்சிந்தனை சமூகச் சீர்திருத்த இயக்கங்களின் மூலம் புதிய திசை பெற்றது. கருணை மற்றும் உயிர் நேயத்தை வள்ளலார் வலியுறுத்தினார். பாரதியார் பெண்களுக்கான சமத்துவம், சுதந்திர சிந்தனை ஆகியவற்றை முன்னிறுத்தினார். சாதி ஒழிப்பு, சுயமரியாதை, பகுத்தறிவு ஆகியவற்றின் மூலம் சமூக நீதியைப் பெரியார் வலியுறுத்தினார். இக்காலத்தில் அறம் தனிநபர் ஒழுக்கத்தைத் தாண்டி, சமத்துவம் மற்றும் மனித உரிமைகள் நோக்கி விரிந்து செல்கின்றது.

இன்றைய காலத்தில் அறமானது புதிய சவால்களை எதிர்கொள்கிறது. தொழில்நுட்ப வளர்ச்சி, நகரமயமாக்கம், உலகமயமாக்கல் ஆகியவற்றுக்கிடையில் மனிதம் சிக்கித் தவிக்கின்றமையால் மனிதநேயம், உலக சமாதானம், சமூகப்பொறுப்பு ஆகியவற்றைப் பற்றியும் அக்கறை கொள்ளுதல் அவசியமாகின்றது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சமூக சேவை, மனித உரிமைகள் போன்றன இன்றைய காலத்தில் அறத்தைப் பேணுதலுக்கான புதிய தேவைகளாக உருப் பெற்றுள்ளன.

முடிவாக, சங்ககாலம் முதல் இன்று வரை தமிழர்களின் அறம் சார்ந்த வாழ்க்கை முறை காலத்திற்கேற்ப மாற்றங்களை கொண்டாலும், அதன் அடிப்படை நோக்கம் மாற்றமின்றி நிலைத்து வருகிறது. மனிதநேயம், நீதி, சமத்துவம், கருணை, குடும்பக்கட்டமைப்பு ஆகிய அறக் கோட்பாடுகள் தமிழர் பண்பாட்டின் நிலையான அடையாளங்களாகத் தொடர்ந்து பேணப்பட்டு வருமாயின் தமிழர் என்ற இனம் தனித்துவமானதாக உலகப் பரப்பில் அடையாளம் காணப்படும் என்பதில் சந்தேகமில்லை

அச்சில் வெளியான பக்கத்தைப் பார்க்க
சங்ககாலம் முதல் இன்று வரை தமிழர்களின் அறம் சார்ந்த வாழ்க்கை முறை — அச்சுப் பிரதி
சிட்னி பொங்கல் விழா மலர் இதழில் வெளியானது.

இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்ததா?

உங்கள் விருப்பத்தைத் தெரிவியுங்கள், நண்பர்களுடன் பகிருங்கள்.

எழுதியவர்

சியாமளா யோகேஸ்வரன்

இலங்கை பேராதனைப் பல்கலைக்கழக விவசாய பீடப் பட்டதாரியான சியாமளா யோகேஸ்வரன், அவுஸ்திரேலியாவில் வசித்து வருகிறார். குயின்ஸ்லாந்து தமிழ்ச்சங்கம் மற்றும் குயின்ஸ்லாந்து தமிழ் மன்றம் நடாத்திய சிறுகதைப் போட்டிகளில் பல பரிசில்களை வென்றுள்ளார். நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள், இந்து சமயம் பற்றிய ஆய்வு நூல் என இதுவரை ஒன்பது நூல்களை எழுதியுள்ளார்.

மேலும் வாசிக்க

கட்டுரைகள்

கேள்விக்குறியாகும் சிறுவர் பாதுகாப்பு; தொடர்கதையாகும் பெண்மையின் துயரம்

வயது வேறுபாடு இன்றி பெண்களின் பாதுகாப்பு எங்கேயும் எப்போதும் கேள்விக்குறியாவது இன்னமும் அரங்கேறிக் கொண்டிருக்கும் ஒரு அவலம். அந்த வகையில் ஆஸ்திரேலியாவின் பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஒரு சிறுமியின் துயரக்கதை… (எதிரொலி பத்திரிகையில் வைகாசி மாதம் பிரசுரமானது) தொடர்கதையாகும்…

5 ஜூலை 2026
கட்டுரைகள்

சமூகவலைத்தளங்கள் எனும் சிலந்திவலையில்…

தொழினுட்பம் எமது வாழ்க்கையோடு பிரிக்க முடியாதபடி இணைந்து விட்டாலும் அவ்வப்போது சிலரது வாழ்க்கையைக் கீறித் தன் கூர்மையைப் பரிசோதித்துப் பார்த்து விட்டும் செல்கின்றது. தாய்வீடு இதழில் வெளி வந்த “சமூக வலைத்தளங்கள் எனும் சிலந்தி வலையில்” என்ற கட்டுரை.…

26 ஜனவரி 2026
கட்டுரைகள்

பந்தாடப்படும் பழங்குடியினர்

தை மாத எதிரொலி பத்திரிகையில் வெளிவந்த “பந்தாடப்படும் பழங்குடியினர்”- அவுஸ்ரேலிய நாள் என்று கொண்டாடப்படும் இன்றைய தினத்தை ஆக்கிரமிப்பாளர் தினமாகக் கருதும் பழங்குடியினரின் வேதனைகள். 60000 ஆண்டுகளுக்கு மேலான பழமை வாய்ந்த பண்பாட்டைக் கொண்டவர்களாய் அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து…

26 ஜனவரி 2026

எழுத்தாளரின் நூல்

நம்பிக்கை

நூலைப் பார்க்க

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *